உலக வலைப்பந்து தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்!

  • Post author:
You are currently viewing உலக வலைப்பந்து தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்!

உலக வலைப்பந்து வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச வலைப்பந்து சங்கம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய திறந்த சுற்று பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

32 வயதான ஜோகோவிச் 5-வது முறையாக முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் இந்த முதல் இடத்தை 276-வது வாரமாக அலங்கரிக்கிறார். இதன் மூலம் முதல் இடத்தை அதிக வாரங்கள் வகித்த வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வகையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (310 வாரங்கள்) முதலிடத்திலும், அமெரிக்க முன்னாள் வீரர் பீட் சாம்பிராஸ் (286 வாரங்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய திறந்த சுற்று போட்டியில் கால்இறுதியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,395 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அரை இறுதியில் தோல்வி கண்ட சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,130 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (7,045 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளார். 4-வது சுற்றில் தோல்வி கண்ட ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் (5,960 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (4,745 புள்ளிகள்) 6-வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (3,885 புள்ளிகள்) 7-வது இடத்திலும், இத்தாலி வீரர் மாட்டோ பெர்ரெட்டினி (2,905 புள்ளிகள்) 8-வது இடத்திலும் தொடருகின்றனர். பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் (2,700 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தையும், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் (2,555 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஒரு இடம் முன்னேறி 122-வது இடத்தையும், சுமித் நாகல் 6 இடம் உயர்ந்து 125-வது இடத்தையும், ராம்குமார் 2 இடம் முன்னேறி 182-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 2 இடம் சறுக்கி 40-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் திவிஜ் சரண் 53-வது இடத்திலும், புரவ் ராஜா 91-வது இடத்திலும் தொடருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய திறந்த சுற்று அரைஇறுதியில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய வீராங் கனை ஆஷ்லி பார்ட்டி (8,367 புள்ளிகள்) முதல் இடத்தில் நீடிக்கிறார். அரைஇறுதியில் தோற்ற ருமேனியா வீராங் கனை சிமோனா ஹாலெப் (6,101 புள்ளிகள்) 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 3-வது சுற்றில் தோல்வி கண்ட செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (5,290 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார். உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (4,775 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் (4,675 புள்ளிகள்) 2 இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு (4,665 புள்ளிகள்) 6-வது இடத்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலிய திறந்த சுற்று பட்டத்தை உச்சி முகர்ந்த அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் (4,495 புள்ளிகள்) 8 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் (3,965 புள்ளிகள்) 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்து இருக்கிறார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (3,915 புள்ளிகள்) 9-வது இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் வெற்றியாளரான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (3,626 புள்ளிகள்) 6 இடம் சறுக்கி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள