எல்லைச் சாமிகள்

You are currently viewing எல்லைச் சாமிகள்

தொல்லைகள் தந்தவர்
தொலைந்து போக
எல்லைகள் காத்தனர்
எங்கள் எல்லைச் சாமிகள்!

வல்லவராய்
வரலாற்றின் பிள்ளைகளாய்
உயர்ந்து நிற்கும்
உரிமைப்போரின்
தேரோட்டிகளாய்
உணர்வில் உயிரூட்டியவர்
உகண்டு போகத மண்ணில்
உலகே அவர்கள் பின்னால்
திரண்டெழுந்தனர்!

புயலென்ன மழையென்ன
காயவைக்கும் வெயிலென்ன
காடு மேடு கடந்து
உண்ணாடியில் மண்தாயைச்
சுமந்து
உதாசீனன்களாய்
எமக்காக வாழ்ந்தனர்!

உரகம் ஊர்ந்து உடலில்
ஏறிய போதும்
உரமுள்ள நெஞ்சராய்
எதிரியை உசாராக்காது
வைத்த குறி பிறழாது
உருது காத்து நின்றனர்!

பகைவரின் சுற்றிவளைப்பில்
நாட்கள் மாதங்களாகி
தண்ணீர்த் தாகம்
சுவாசப் பைகளை
துளைத்து எடுக்க
நாவரண்டு உயிர் சுருளும்
கணங்களில்
சிறுநீர்கழித்து
பருகியவரின்
அறத்தின் உச்சத்தை
அறைந்து போகிறது
மறத்தின் மாந்தரை
நினைந்துருகும்
தருணங்கள்!

கார்த்திகை கருப்பையுடைத்து
மரகத மண்ணில்
நீரிறைக்கும்
மாரிகாலத்தில்
கார்த்திகை பூக்களின்
புன்னகை விரிப்பில்
உறவாடிய மறவரின்
உயிர்பிரியா நினைவுகள்
இணைபிரியாது
இதயத்தை வருடிப்
போகிறது!
இனம்புரியாத வலியொன்றின்
பிரசவிப்பில்
கனத்த இரவுகளாக
கடந்து போகிறது
காலம்!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள