ஏமன் நாட்டில் 31 பேர் பலி ; சவுதி கூட்டுப்படை தாக்குதல்!

  • Post author:
You are currently viewing ஏமன் நாட்டில் 31 பேர் பலி ; சவுதி கூட்டுப்படை தாக்குதல்!

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 31 பேர் பலியாகினர்.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் களத்தில் இருக்கின்றன.

இந்த படைகள் அங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்துகின்றன. இதற்கான ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி வருகிறது. அதே போல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

இந்த உள்நாட்டு போரால் ஏமனில் உள்ள அப்பாவி மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரு தரப்பு மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைக்க வேண்டி பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஏமனின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஜவாப் மாகாணத்தின் வான்பரப்பில் பறந்த சவுதி கூட்டுப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக நேற்று முன்தினம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் சவுதி கூட்டுப்படைகளின் செய்தி தொடர்பாளர் துர்கி அல் மாலிகி, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையில் ஏமன் அரசு படைக்கு உதவியாக சென்ற போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாகவும், இதுபற்றி விசாரித்து வருவதாகவும் கூறினார்.

அதேசமயம் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பதை தெரிவிக்காத அவர், விமானத்தில் இருந்தவர்களின் கதி என்ன என்பது பற்றியும் கூறவில்லை.

இந்த நிலையில் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு அல் ஜவாப் மாகாணத்தில் உள்ள அல் மஸ்லப் நகரில் சவுதி கூட்டுப்படைகளின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

இந்த குண்டுகள் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் என 31 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏமனுக்கான ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லிஸ் கிரனேட் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு 5 ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் பொறுப்பேற்க வேண்டுமென கூறினார்.

அதே போல் ‘சேவ் தி சில்ட்ரன்‘ என்ற மனிதாபிமான குழு அறக்கட்டளையின் ஏமன் நாட்டு இயக்குனர் சேவியர் ஜூபெர்ட் கூறுகையில், “பொதுமக்கள் உயிரிழக்க காரணமான இந்த வான்வழி தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது ஏமனில் இன்னும் மோதல் குறையவில்லை என்பதை காட்டுகிறது“ என்றார்.

மேலும் அவர், இந்த சமீபத்திய தாக்குதல் அவசரமாகவும் சுதந்திரமாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் கூறினார்.

ஏமன் மோதலில் இருதரப்புக்கும் ஆயுத விற்பனை செய்பவர்கள் உடனடியாக அதை நிறுத்தவேண்டும் என்றும் இந்த போருக்கான ஆயுதங்களை வழங்குவதன் மூலம், இன்றைய கொடுமைகளை செய்வதற்கு பங்களிப்பு செய்கிறோம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் ஜூபெர்ப் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள