ஐநாவில் இன்று வாக்கெடுப்பு!

You are currently viewing ஐநாவில் இன்று வாக்கெடுப்பு!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் தலைமையிலான 6 நாடுகள் இணைந்து முன்வைத்துள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற இருந்த நிலையில், நிகழ்ச்சி நிரலின் கால வரையீடு சிக்கல் காரணமாக இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிராக 46/1 வரைவு பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஜெனிவா நேரப்படி இன்று காலை 9 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளது. அது இலங்கை நேரப்படி பிற்பகல் ஒரு மணியாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது அமர்வில் நேற்றும் இன்றும் இலங்கை உட்பட 9 நாடுகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பான பிரேரணைக்கு சுமார் 40 நாடுகள் இணை அனுசரணையாளர்களாக கையெழுத்திட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மேற்குலக நாடுகளாகும்.

இந்த விடயத்தில் இலங்கைக்கு தெற்காசிய நாடுகள் ஆதரவளிக்கலாம் என்பதுடன், பாகிஸ்தான் இலங்கையின் வெளிப்படையான ஆதரவாளராக இருந்து வருகின்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளிடக்கிய ‘குவாட்’ கூட்டணியால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என இராஜதந்திர தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்குக்கு எதிரான குவாட் நாடுகளின் சுதந்திர, திறந்த இந்தோ – பசுபிக் கொள்கைக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்குமாறு இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அயல் நாடான இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று அரச தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால், தமிழர் தீர்வு விடயத்தில் அதிக சிரத்தை கொண்ட இந்தியா, இலங்கையை எதிர்த்துப் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது இந்தியா நடுநிலை வகிக்கும் என்று புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இலங்கைக்கு எதிரான பிரேரணை இன்று தீர்மானமாக நிறைவேறுவது உறுதி என ஜெனிவாத் தகவல்கள் அடித்துக் கூறுகின்றன

பகிர்ந்துகொள்ள