ஒப்பந்தத்தை வெளியிடக் கூடாது!-சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடு!

You are currently viewing ஒப்பந்தத்தை வெளியிடக் கூடாது!-சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடு!

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதும் திருத்தங்கள் வரலாம். சீனாவும் இந்தியாவும் என்ன சொல்லப் போகின்றன என்று தெரியாது. மூன்று முக்கிய தரப்புகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர் ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றிய நிலையில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் மாத்திரம் தான் செல்ல வேண்டும்.

ஆனால் தற்பொழுது ஏனைய நாடுகளுடனும் பேச வேண்டியுள்ளது. ஜப்பான்,சீனா மற்றும் இந்தியா என்பன பரிஸ் கழக அங்கத்துவ நாடுகளல்ல. அந்த பேச்சுவார்தைகளிலும் திருத்தங்கள் வரலாம் . அவர்கள் இலக்கு ஒன்றை தந்துள்ளனர். இது 4 வருட திட்டம்.

உடன்பாடுகள் நிறைவடையும் வரை ஒப்பந்தத்தை வெளியிடக் கூடாது என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதும் திருத்தங்கள் வரலாம்.

சீனாவும் இந்தியாவும் என்ன சொல்லப் போகின்றன என்று தெரியாது. மூன்று முக்கிய தரப்புகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர் அறிவிப்போம் என்றார்.

விமல் வீரவங்ச எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தனிப்பட்ட கடன் , சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெற்ற கடன் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பெற்ற கடன் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இரு தரப்பு கடன் இதில் பிரதானமானது. வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும் அது உடன்பாட்டுக்கு வரும் என கருதுகிறோம்.தனிப்பட்ட கடன் தொடர்பில் சிக்கல் இருக்கும் என்று கருதவில்லை. பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏதாவது ஒரு நாடு உடன்படாவிட்டால் ஏற்படும் தாக்கம் குறித்து விமல் வீரவன்ச எம்.பி.மீண்டும் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி , இங்கு இரண்டு மாற்றுவழிகள் தான் உள்ளன. கடனை ரத்துச் செய்வதா அல்லது கடனை மீளச் செலுத்தும் காலப்பகுதியை நீடிப்பதா ஆகிய இரண்டு வழிகள் குறித்தே ஆராயப்படும். அதில் ஒரு மாற்று வழியை தேட முடியுமாக இருக்கும் என்றார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் உதவியில் மாற்றம் வரும் நிலையில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என சந்திம வீரக்கொடி எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, குறிப்பிட்ட எல்லைக்குள் தான் நாம் செயற்படுகிறோம். அந்த எல்லைக்கு மாற்றமாக ஏதும் நடந்தால் நாம் அது பற்றி அறிவிப்போம். மக்கள் மீது அதிக சுமையேற்றுவதா ? நேரடி வரியை அதிகரிப்பதா ? என்பது குறித்தும் அரசின் செலவுகளை குறைப்பது தொடர்பிலும் தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த மூன்று வழிகள் தான் உள்ளன என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments