ஒஸ்லோவில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்! நீர்ப்பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை!!

You are currently viewing ஒஸ்லோவில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்! நீர்ப்பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை!!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நீருக்கான பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், நகரவாசிகள் நீர்ப்பாவனையை கட்டுப்படுத்த வேண்டுமென ஒஸ்லோ வாசிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒஸ்லோ பெருநகருக்கு நீரை வழங்கும் பிரதான நீர்நிலையான “Maridalsvannet” மற்றும் ஆற்று நீர்நிலைகளில் நீரளவு குறைவடைந்துள்ளதால், அதீதமான நீர்ப்பாவனை, நீருக்கான பற்றாக்குறையை ஏற்படுத்துமென அச்சம் வெளியிட்டுள்ள ஒஸ்லோ மாநகர நிர்வாகம், அனாவசியமான நீர்ப்பாவனையை மக்கள் தவிர்த்துக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், நீர்ப்பாவனையை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் அறிவுறுத்தியுள்ளது.

குளிக்கும்போது நீரளவை குறைத்து பயன்படுத்துதல் / அல்லது குளிக்கும் நேரத்தை மட்டுப்படுத்துதல் / சவர்க்காரம் – ஷாம்பு பாவிக்கும்போது நீரை நிறுத்தி விடுதல்….

பல்துலக்கும்போது, நீரை வீணாக திறந்து விடுதலை தவிர்த்தல்…

நீரை பயன்படுத்தும் வீட்டு பாவனைப்பொருட்களின் இயக்கத்தின்போது, அவ்வியந்திரங்கள் குறைந்தளவு நீரை பயன்படுத்தும் நிலையில் அவற்றை வைத்தல்…

குறைந்தளவு ஆடைகளை கழுவுவதற்காக அடிக்கடி சலவை இயந்திரத்தை பாவிப்பதை தவிர்த்தல்…

மலசலகூடங்களின் “நீரிறக்கி பொறி மலகூடம் / wc” கொண்டிருக்கக்கூடிய, குறைந்தளவு நீரை பாவிக்கும் வசதியை பயன்படுத்துதல்…

வீட்டு முற்றங்களில் புல் தரைகளுக்கு நீர் பாய்ச்சுவதை கட்டுப்படுத்துதல்…

வாகனங்களை நீர் பயன்படுத்தி சுத்தம் செய்வதை கட்டுப்படுத்துதல்…

போன்ற மேற்கூறப்பட்ட வழிவகைகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென ஒஸ்லோ மாநகர நிர்வாகம், நகரவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, இது குறித்த அறிவித்தலையும் அனைத்து ஒஸ்லோ நகரவாசிகளுக்கு குறுந்தகவல் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments