கடன்படப்போகும் கோத்தபாய!- கோபி இரத்தினம்

You are currently viewing கடன்படப்போகும் கோத்தபாய!- கோபி இரத்தினம்

கோத்தாபாய இராஜபக்ச ஆட்சிக்கு வந்து மூன்று வாரங்களாகின்றன. அதற்கிடையில் அவரைக் கொழும்பில் வைத்துச் சந்தித்தார் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். அவரது அழைப்பையேற்று, கோத்தாபாய  இந்தியாவிற்குப் பயணம் செய்து இந்தியப் பிரதமர் மோதியைச் சந்தித்திருக்கிறார். கோத்தாபாயவுடனான தனது சந்திப்புப் பற்றி இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்த ஜெய்சங்கர், தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை நிறைவேற்ற வேண்டும், இனங்களுக்கிடையிலான நல்லெண்ண முயற்சி தொடரவேண்டும் என இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பினைத் தான் தெரியப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். பிரதமர் மோதியுடனான கோத்தாபாயவின் சந்திப்புப் பற்றி வெளியாகும் செய்திகளின்படி பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டதாகத் தெரியவருகிறது. இவற்றை வைத்துப் பார்க்கையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டிருப்பதுபோன்றதொரு தோற்றப்பாடு தோன்றுகிறது. உண்மையில் நிலமை அவ்வாறு இருக்கிறதா?

நடந்து முடிந்த சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் கோத்தாபாய இலகுவாக வெற்றிபெற்றிருக்கிறார் என்றே கூறவேண்டும. கோத்தாபாயவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு பொருத்தமான வேட்பாளர் ஒருவர் இல்லாத நிலையில் அவரது வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. தமிழ் ஊடகப்பரப்பில் இந்நிலமையை திரித்து, சஜித் பிரேமதாசவிற்கும் அவருக்கும் இடையில் பலமானதொரு போட்டி நிலவுவதாக காட்டப்பட்டமைக்கு அரசியல் உள்நோக்கம் இருந்தது. தேர்தல் புறக்கணிப்பைத் தடுத்து, சிறிலங்காவின் ஒற்றையாட்சியை தமழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு இந்த யுக்தி பெருமளவில் பயன்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னராவது நாம் விடயங்களை உய்த்தறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பெரும்பாலான சிங்களமக்கள் குறிப்பாக கிராமங்களில் வாழ்பவர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து இரண்டு விடயங்களை எதிர்பார்த்தார்கள். ஒன்று தங்களது பொருண்மிய நிலமையை மேம்படுத்துதல். இரண்டாவது, தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல். இரண்டாவது விடயத்திலேயே இலங்கைத்தீவில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்கள் சிங்கள மக்களிலிருந்து வேறுபட்டார்கள். அதுவே தேர்தல் முடிவுகள் பற்றிய வரைபடத்தில் பிரதிபலித்தது. சிறிலங்காவின் தேசியபாதுகாப்பு என்பது அந்நிய நாடுகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது அல்ல. அவ்வாறு பாதுகாக்கக் கூடிய வலுவும் அந்நாட்டுக்கு இல்லை.  உள்நாட்டில் அரச எதிர்ப்பு சக்திகளிடமிருந்து சிறிலங்காவின் ஆட்சிமையத்தைப் பாதுகாப்பதே சிறிலங்காவின் தேசியபாதுகாப்பு  என வரையறுக்கப்படுகிறது. இன்றைய சூழலில் அவ்வெதிர்ப்பு தமிழ், முஸ்லீம் மக்களிடமிருந்து வருவதாகவே சிங்கள மக்கள் கருதுகிறார்கள். அதே சமயத்தில் தமிழ், முஸ்லீம் மக்களோ சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தங்களை ஒடுக்க சிங்கள அரச மையம் முயற்சிப்பதாக அச்சப்படுகிறார்கள். கடந்தகால நிகழ்வுகளைக் கருத்தில் எடுக்கும்போது இவ்வச்சம் நியாயமானது.

சிறிலங்காவின் தேசியபாதுகாப்பு விடயத்தில் கோத்தாபாய சிங்கள மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒருவராக தன்னை இனங்காட்டலாம். ஆனால் அவரால் அவர்களது பொருண்மிய எதிர்பார்ப்புகளைப் நிறைவேற்றவது சாத்தியமானதொன்றாக அமையப்போவதில்லை.  கொழும்பு ஊடகங்களுக்கு கோத்தாபாய வழங்கி வரும் செவ்விகளில், அவர் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கப் போவதாகக் கூறிவருகிறார். இலங்கைத் தீவைப் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றில், அதுவும் அதிகாரச் சீர்கேடு, ஊழல் என்பவை மலிந்த ஒரு நாட்டில் இதுவொன்றும் மந்திரத்தால் நடத்திக்காட்டக் கூடிய விடயமல்ல என்பது கோத்தாபாயவிற்கு தெரியாதிருக்க நியாயமில்லை.

இப்போது அவர் முன்னுள்ள ஒரே மார்க்கம் எங்கிருந்தாவது கடன்பெற்று நாட்டின் பொருளாதாரத்தை தக்கவைப்பது  என்பதாகவே அமைகிறது. அவ்வாறு கடன் பெறுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் அவருக்கு இருக்கின்றன. ஆனால் அக்கடனுடன் கூட வரும் நிபந்தனைகள் அழுத்தங்களைக் கண்டே அவர் அச்சப்படுகிறார். அவருக்கு இருக்கும் தெரிவுகளை வழங்குபவர்கள்  தங்களுக்குள் முரண்படும் தரப்புகளாக உள்ளனர். பிராந்திய வல்லாதிக்கங்களின் பிடியில் அவர் சிக்குண்டுள்ளார்.

மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் சீன அரசாங்கதிடமிருந்து பெறப்பட்ட கடனை அடைக்க முடியாத நிலையில் இரணில் அரசாங்கம் சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் அதன் அண்டிய பகுதிகளையும் China Merchants Port Holdings Co என்ற சீன நிறுவனத்திற்கு  1.1 பில்லியன் அமெரிக்க டொடலர்களுக்கு 99 வருடகால குத்தகைக்கு வழங்கியது.  சீனா பக்கம் அணிசேராத, மேற்குலக ஆதரவாளரான இரணிலுக்கு வேறு வழிவகையில்லாத நிலையிலேயே இம்முடிவிற்கு வந்தார். இரண்டு இறைமையுள்ள அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தத்தை இரண்டு தரப்பும் இணங்கினாலே ஒழிய ஒரு தரப்பால் முறிக்க முடியாது. இந்நிலையில் இவ்வொப்பந்தத்திலிருந்து வெளிய வர கோத்தாபாயவால் முடியாதிருக்கும். அதே சமயத்தில் இவ்வொப்பந்தத்திலிருந்து வெளியே வருவதற்கு மாற்றீடாக சீனா கேட்கும் விடயங்களை நிறைவேற்றவும் அவரால் முடியாதிருக்கும். ஆதலால்தான் சீனாவின் Road and Belt திட்டத்தின் பிரகாரம் கிடைக்கும் உள்ளக கட்டுமான உதவிகளை ஏற்றுக்கொள்ளாமலிருந்பதானால் அதற்கு நிகராக மற்றைய நாடுகள் தமக்கு உதவ வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக கோத்தாபாய வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்.

கோத்தாபாயவின் இந்தியப் பயணத்தின்போது, உள்ளக கட்டுமானங்களை நிர்மாணிப்பதற்கு  400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதாக இந்திய அராசங்கம் அறிவித்திருக்கிறது. ஆனால் இது சீனாவிடமிருந்து வரக்கூடிய நிதியுதவியை விடக் மிகவும் குறைவான தொகையாகவே இருக்கும்.  ஏற்கனவே ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்க திணைக்களத்தின் கீழ் வரும் Millennium Challenge Corporation 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திருப்பியளிக்க தேவையில்லாத உதவியாக வழங்குவதாக அறிவித்திருக்கின்றது. ஆனால் அதனைப் பெற்றுக்கொள்வதானால் அமெரிக்க அரசின் அழுத்தங்களுக்கு உட்பட வேண்டியிருக்கும், இராணுவ ஒப்பந்தங்களில் கைச்சாத்தட வேண்டும் எனவும் இராஜபக்ச சகோதரர்கள் அஞ்சுகின்றனர். அதுபோலவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி பெறும்போது விதிக்கப்படும் கட்டுபாடுகளையிட்டும் அவர்கள் மகிழ்ச்சியடைய முடியாது.

இலங்கைத்தீவு கேந்திர முக்கியம்வாய்ந்த கடல்வழிப்பாதையில் அமைந்திருப்பதாகப் பெருமைப்படும் கோத்தாபாய இந்தப் பிராந்தியப் போட்டியில் சிக்கி சின்னாபின்னப்படப் போவதையிட்டு கவலைப்படாமல் இருக்க முடியாது.

இனி முதலாவது பந்தியை திருப்பி வாசியுங்கள், இந்த பிராந்தியப் போட்டியில் சிறிலங்காவை தன்வசம் வைத்திருக்க இந்தியா தமிழ் மக்களின் விடயத்தை மீளவும் கையிலெடுக்க முனைவது தெரிகிறது. அது எவ்வாறு நகரப்போகிறது என்பது சிறிலங்கா – இந்தியா – சீனா உறவுகளில் மாத்திரம் தங்கியிருக்கிறது என்பதனை எமது முன்னைய பட்டறிவிலிருந்து நாம் உணர்ந்துகொள்ளலாம்.

பகிர்ந்துகொள்ள