கடற்படை தளபதியை விடுவிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

You are currently viewing கடற்படை தளபதியை விடுவிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் 2008 -2009 ஆண்டு காலப்பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி காணாமல் போகச் செய்த குற்றச்சாட்டு சுமந்தப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நீக்க வேண்டாமென காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 13 வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொர்ந்து பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமைய, மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் குற்றப்பத்திரிகை மீதான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

667 குற்றச்சாட்டுகள், 126 சாட்சிகள் மற்றும் 64 வழக்குக் கோப்புகளுடன், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார ஜயதேவ கரன்னகொடவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை தொடர்ந்து கொண்டு நடத்த முடியாது என சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜனக பண்டார இதனை தெரிவித்தார்.

கஸ்தூரி ஆராச்சிலாகே ஜோன் ரீட், அந்தனி கஸ்தூரி ஆராச்சி, ராஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், மொஹமட் சஜித், திலகேஸ்வரம் ராமலிங்கம், ஜமால்டின் டிலான், அமலன் லியோன், ரோஷன் லியோன், கனகராஜா ஜெகன் மற்றும் மொஹமட் அலி அன்வர் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

கடத்தப்பட்ட இளைஞர்களை விடுவிக்க கடற்படை அதிகாரிகள் அவர்களது பெற்றோரிடம் கப்பம் பெற்றமை விசாரணையில் தெரியவந்தது. குற்றப்புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய கடத்தப்பட்டவர்களில் பலர் கொழும்பிலும் ஏனையவர்கள் கடற்படையின் திருகோணமலை கன்சைட் முகாமிலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளாக இருந்த லெப்தினன் கமாண்டர் சம்பத் முனசிங்க, கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான லெப்டினன் கமாண்டர் டீ.கே.பி. தஸநாயக்க, புலனாய்வுப் பிரிவு கமாண்டர் சுமித் ரணசிங்க, கடற்படை கப்டன் லக்ஷ்மன் உதயகுமாரமற்றும் புலனாய்வு அதிகாரிகளான லலித் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிட இஹலகெதர தர்மதாஸ, ராஜபக்ச பத்திரணலாகே கித்சிறி, கஸ்தூரிகே காமினி, முத்துவாஹென்நெதி அருண துஷார மெண்டிஸ் மற்றும் முன்னாள் லெப்தினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 13 வருடங்களாக பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்த நாம் இந்த 14 குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டு நியாயம் நிலைநாட்டப்படும் என நம்புகிறோம் என காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த விடயமானது இயற்கையின் கோட்பாடுகளுக்கும் நீதிக்கும் எதிரானது என்பதால், ஆதரவற்ற பாதிக்கப்பட்ட பெற்றோருக்காக, வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை மீளப் பெறுவதைத் தவிர்க்குமாறு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவா்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments