கடும் நெருக்கடியில் ஆப்கானை கைவிட்டு முழுமையாக வெளியேறுகிறது அமெரிக்கா!

You are currently viewing கடும் நெருக்கடியில் ஆப்கானை கைவிட்டு முழுமையாக வெளியேறுகிறது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்டு வரும் 20 ஆண்டு கால போரை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் 31-ஆம் திகதியுடன் அங்கிருந்து தமது படைகள் வெளியேறும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களிலும் தலிபான் இயக்கத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன், பல்வேறு பகுதிகளை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸதானில் தீவிரமடைந்துவரும் தலிபான்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தான் படையினர் அண்டை நாடுகளுக்குத் தப்பியோடி வருகின்றனர். தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1,000 வரையான ஆப்கான் படைகள் தங்கள் நாட்டுக்குள் வந்து தஞ்சமடைந்துள்ளதாக தஜிகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படைகூறியுள்ளது.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளாக நிலைகொண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள், தாங்கள் அளித்த செப்டம்பர் மாத கெடுவுக்குள் முழுதாக நாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டும். அதற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டுப் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவர் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

டோகா உடன்படிக்கைக்கு மாறாக செப்டம்பர் மாதத்துக்குப் பின்னரும் அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்? என்பது குறித்து எங்கள் தலைமை முடிவு செய்யும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் சில நாட்களுக்கு முன்னர் விடுத்த எச்சரிக்கையில் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலே ஆப்கானிஸ்தானை இக்கட்டான நிலையில் கைவிட்டு முழுமையாக வெளியேறும் அறிவிப்பை வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டார்.

ஆப்கனிஸ்தானை கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க இராணுவம் அங்கு செல்லவில்லை. அந்த நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆப்கான் தலைவா்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கா்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை எனவும் ஜோ பைடன் கூறினார்.

தலிபான்களை நாங்கள் நம்பவில்லை என்றபோதும், ஆப்கானிஸ்தான் அரசை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் திகதியுடன் முழுமையாக முடிவுக்கு வரும் எனவும் ஜோ பைடன் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களை 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.

அமெரிக்காவில் 9/11 தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல்-காய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தலிபான்கள் சேர்ந்து செயல்பட்டதால் அங்கு களமிறங்கிய அமெரிக்கா தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றி, தனக்குச் சார்பான புதிய அரசை அமைக்க உதவியது.

எனினும் இப்போது திடீரென அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் வெளியேறும் நிலையில் தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments