கனடாவை புரட்டியெடுத்த ‘பியோனா’ புயல்!

You are currently viewing கனடாவை புரட்டியெடுத்த ‘பியோனா’ புயல்!

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கனடாவின் கிழக்கு பகுதிகளை ‘பியோனா’ புயல் நேற்று முன்தினம் பந்தாடியது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது.

இந்த புயலால் நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்ட்லேண்ட் ஆகிய மாகாணங்களும், பிரின்ஸ் எட்வர்டு மற்றும் மாக்டலன் தீவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்ததால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே புயலால் கடல் சீற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடற்கரையோரத்தில் இருந்த ஏராளமான வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டன. புயல், மழையை தொடர்ந்து பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் தகவல் தொடர்பு, சாலை போக்குவரத்து உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ராணுவத்தை அனுப்பியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பு காரணமாக ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜப்பான் செல்ல இருந்த பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments