கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்!

  • Post author:
You are currently viewing கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்!

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசுக் கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 20-ந்தேதி (அதாவது கொரோனா வைரஸ் தீவிரமடைவதற்கு முன்பு) ஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகரமான யோகோஹாமாவில் இருந்து சீனாவில் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கு டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் சென்றது

இந்த கப்பலில் சுமார் 2,666 பயணிகளும், 1,045 ஊழியர்களும் பயணித்தனர். இந்த கப்பல் கடந்த 25-ந்தேதி ஹாங்காங் சென்றடைந்தது. அப்போது கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவர் தரையில் இறங்கினார். ஆனால் பின்னர் அவர் கப்பலுக்கு திரும்பவில்லை. அதன் பின்னர் அந்த சொகுசு கப்பல் ஹாங்காங்கில் இருந்து மீண்டும் ஜப்பானுக்கு புறப்பட்டது. இதற்கிடையில் ஹாங்காங்கில் கப்பலில் இருந்து இறங்கிய 80 வயது முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த 30-ந்தேதி தெரியவந்தது.

இது குறித்து அவர் பயணம் செய்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருக்கும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு கடந்த 1-ந்தேதி இந்த தகவல் கிடைத்தது. அப்போது இந்த கப்பல் ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தை வந்தடைந்திருந்தது. இதுபற்றி ஜப்பான் அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் மாகாண தலைநகரான நாகாவில் உள்ள துறைமுகத்துக்கு அருகே கப்பலை தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தினர். எனினும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கப்பலில் இருக்கும் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர்கள் அனைவரும் தரையில் இறங்கலாம் என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

அதன்பிறகு டைமண்ட் பிரின்சஸ் கப்பல் அங்கிருந்து யோகோஹாமா நகருக்கு புறப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை யோகோஹாமா துறைமுகத்துக்கு கப்பல் வந்து சேர்ந்தது. அப்போது கப்பலில் இருந்த 10 பேருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. 
இதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் கப்பலில் உள்ள 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்களை தரையில் இறங்குவதற்கு தடை விதித்த ஜப்பான் அரசு, கப்பலை துறைமுகத்தில் இருந்து சில மைல் தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி தனிமைப்படுத்தி வைத்தது. 

முன்னதாக கடந்த வாரம் இதே போல் இத்தாலி தலைநகர் ரோமுக்கு 7 ஆயிரம் பேருடன் சென்ற சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக துறைமுகத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பகிர்ந்துகொள்ள