கலவரங்களின் பின்னணியில் மதத் தலைவர்கள் என்ற கருத்தை வாபஸ் பெறமாட்டேன்!

You are currently viewing கலவரங்களின் பின்னணியில் மதத் தலைவர்கள் என்ற கருத்தை வாபஸ் பெறமாட்டேன்!

மே 9 ஆம் திகதி வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டமை உள்ளிட்ட கலவரங்களின் பின்னணியில் சில மதத் தலைவர்கள் இருப்பதாகவும் கலவரங்களில் ஈடுபட்டவர்களுக்கு குறித்த மதத் தலைவர்களின் ஒத்தழைப்பு கிடைத்துள்ளதாகவும் தான் வெளியிட்ட அறிவிப்பை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெற போவதில்லை என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மே மாதம் 9ஆம் திகதி வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்ட கம்பஹா- உடுகம்பள பகுதியிலுள்ள தனது வீட்டை பார்வையிடச் சென்ற போதே, ஊடகங்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “எனது வீட்டில் இரண்டு அரச வாகனங்கள் இருந்தன. பாராளுமன்றத்தில் எனக்கு வழங்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட ஆவணங்களும் இருந்தன. அவை அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. “இது தனது தந்தையின் இடம். 88, 89ஆம் ஆண்டுகளில் இந்த வீட்டில் பலரின் உயிர்களைக் காக்க முடிந்தது. இந்த வீட்டில் பிள்ளைகளுக்காக இலவச வகுப்புகள் நடைபெற்றன. அனைத்தும் இன்று இல்லாமல் போயுள்ளது“ என்று சுட்டிக்காட்டினார்.

“இந்த வீடு எரிப்பு சம்பவங்களின் பின்னணியில் குடு வர்த்தகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவர் தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு தீயிட்டனர் என்பதற்காக அரசியலை கைவிடமாட்டேன். “இதை சவாலாக வைத்துக் கொண்டு வலுவான அரசியல்வாதியாக முன்வருவேன். இந்த குற்றங்களை செய்தவர்களை சட்டமும் இயற்கையும் தண்டிக்கும். அந்த நாளை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளேன்“ என்றார்.

“இந்த சம்பவங்களின் பின்னணியில் சில பிக்குமாரைப்போலவே, பாதிரியார்களும் உள்ளனர். தனது வீட்டுக்கு தீ வைப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர் 3 பாதிரியார்கள் ஆர்ப்பாட்டக்கார்ர்களுடன் வருகை தந்து, வீட்டின் முன்பாக மலர் வளையம் ஒன்றை வைத்துச் சென்றுள்ளனர்.

“நான் எப்போதும் பொய் சொல்வதில்லை. எனது மனசாட்சிக்கு அமையவே செயற்படுவதால் நான் பயப்பட போவதில்லை” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தான் தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி கூறியுள்ளார் என்றும் அந்த கருத்தை நிராகரிக்க வேண்டாம் எனவும் ஆராய்ந்து பார்க்குமாறும் குறிப்பிட்ட அவர், தான் இப்போது சாட்சிகளுடனேயே பேசுவதாகவும் தெரிவித்தார்.

தான் திருமணம் முடித்துள்ளது தமிழ் இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்மணியொருவரை எனத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அதனால் தன்னை இனவாதம், மதவாதத்தை தூண்டுபவன் என்று குற்றம் சுமத்த முடியாது எனவும் அதனைப் பயன்படுத்தி தான் எப்போதும் அரசியல் செய்யவில்லை செய்யப் போவதுமில்லை என்றும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments