காணி மாபியாக்களுக்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம்!

You are currently viewing காணி மாபியாக்களுக்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம்!

மட்டக்களப்பு- ஏறாவூர் சிறீலங்கா காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி காணி மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

இந்த உண்ணாவிரத போராட்டம் மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியருகே முன்னெடுக்கப்பட்டுள்ளது

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர், “என்னுடைய சொந்தக்காணி கடந்த மாத 21ஆம் திகதி சிறீலங்கா காவற்துறையின் பொறுப்பதிகாரியினுடைய வழிநடத்தலில் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டது.

இது தொடர்பில் நான் அவரிடம் பலமுறை கெஞ்சியும் அவர் அதனை மறுதலித்து காணி மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்.

இதற்கு எதிராக நான் நீதி கேட்டு வந்திருக்கின்றேன். முற்றுமுழுதாக என்னுடைய பிரச்சினைகள் விசாரிக்கப்பட வேண்டும். பலவந்தமாக அந்தக் காணியினுள் காணி மாபியாக்களின் ஆட்களை குடியமர்த்திவிட்டு இன்று காணி பிரச்சினையாக இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள் என்கின்றார்.

நாங்கள் நீதிமன்றம் செல்லத் தயாராக இருக்கின்றோம். ஆனால் ஏறாவூர் சிறீலங்கா காவற்துறை பொறுப்பதிகாரியின் துணையுடன் பலவந்தமாக அங்கு குடியமர்த்தப்பட்ட குடும்பத்தையும் வேலியையும் அகற்ற வேண்டும்.

இதன் பின்னர் நாங்கள் நீதிமன்றம் செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம். மூன்று தினங்களுக்கு முன்பு எனது தோட்டத்தை பராமரித்து வந்த நபர் காணி மாபியாக்களினால் வாளாலும் பொல்லாலும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏறாவூர் சிறீலங்கா காவற்துறையின் நீதிமன்றுக்கு தவறான தகவலை வழங்கி எதிரியை உடனடியாக விடுதலை செய்ய உதவியது.

மூன்று முக்கியமான எதிரிகளை கைது செய்யவில்லை. அவர்கள் சிறீலங்கா காவற்துறையின் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எங்கள் காணிக்குள் இன்னும் கத்தி,பொல்லுகளுடன்தான் உள்ளனர். இவர்களை ஏறாவூர் சிறீலங்கா காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி கண்டுகொள்ளவில்லை.

சிரேஸ்ட காவற்துறை மா அதிபர் தலைமையில் அங்குள்ள கிராம மக்கள், மரமுந்திரிகை கூட்டுத்தாபனம், நில அளவையாளர்கள் உட்பட பலரை அழைத்து விசாரணை செய்து நியாயமான தீர்வை வழங்க வேண்டும்.

அதனை வலியுறுத்தி சாகும் வரையிலான இந்த உண்ணாவிரதத்தினை தொடர்வேன் ” என விசனம் தெரிவித்துள்ளார்.

மேலும் காணி மாபியாக்களுக்கு சாதகமாக சட்டத்தினை காய்நகர்த்தும் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி, காணி மாபியாக்களின் கைக்கூலி ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி மீது விசாரணை நடாத்துங்கள் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

காணி மாபியாக்களுக்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments