காலத்தால் அழியாத கவிஞன் புதுவை இரத்தினதுரை!

You are currently viewing காலத்தால் அழியாத கவிஞன் புதுவை இரத்தினதுரை!

தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு.

சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம்.

விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன.

யாழ்ப்பாணத்தில் பதுங்குகுழி வாழ்க்கைக்கும் அவரது கவிதைகள் பழக்கமாயின. விமானத்தின் குண்டு வீச்சுக்களும், பீரங்கிகளின் எறிகணை வீச்சுக்களும் அவரது கவிதைப் பொருளாயின. அவற்றின் படுகொலை வீச்சுக்கண்டு வெம்பி, வெடித்து கோபம் கொண்டு சாபமிட்டன.

யாழ்ப்பாணத்தைவிட்டு விடுதலைப்போரியல் தலைமை இடம்பெயர்ந்த போது புதுவை அண்ணரின் கவிதைகளும் அழுதபடியே சேர்ந்துவந்தன. ஆனால் நம்பிக்கை தளராத வரிகளுடன் விடுதலைக்கனவு குலையாத பாடல்களாய்.

பொருட்தடை, மருந்துத்தடை, போக்குவரத்துத்தடையென எல்லாத் தடையினுள்ளும் கிடந்தழுந்திய எம்மக்களுடன் சேர்ந்திருந்தன புதுவை அண்ணரின் கவிதைகள். வன்னியினுள்ளே நடந்தேறிய விடுதலை வேள்வியில் சேர்ந்தொலித்தன அவரது பாடல்களும்.

காலத்தால் அழியாத கவிஞன் புதுவை இரத்தினதுரை! 1

இராணுவக் கொலை வலயத்தினுள் பயணிக்கும் இளம் வீரருடன் சேர்ந்து புதுவை அண்ணரின் பாடல்களும் பயணித்தன. எம்மக்களுக்கு ஆறுதல் சொல்லின…… போரிட அழைத்தன….. போரிட்டன….. வெற்றிச் செய்திகளும் சொல்லின…. விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ கட்டமைப்பு, எமது தேசத்து நிலபுலங்கள், மக்களது கலாச்சார வாழ்வியல்கள், தமிழீழப் பெண்களது புரட்சிகர போரியல், சர்வதேச அரசியலுடனான எம்மின வாழ்வு என புதுவை அண்ணரது படைப்புக்கள் பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தை தருபவை.

புதுவை அண்ணரது கவிதைகள், பாடல்கள் பற்றி எம்முள்ளே பேசப்படும் வேளைகளில் “காலத்தின் குரல்கள்” என்று கூறுவேன். எமது விடுதலைப்போர் கடந்து வந்த பாதையின் வீரமும், சோகமும், கோபமும், மகிழ்ச்சியும், பெருமிதமுமென மாறி மாறிய உணர்வுகளைக் கொண்ட காலங்களைக் கடந்துள்ளோம். அந்தக்கால உணர்வுகளின் குரலாக புதுவை அண்ணரின் படைப்புக்கள் பதிவு பெற்றுள்ளன என்பது எனது கருத்து.

புதுவை அண்ணருக்கு வாய்த்துள்ள அற்புதமான கவி ஆற்றலும், அனாசயமான சொல் வளமும் அவரை பெரும் கவிஞர்களது வரிசையில் சேர்த்துள்ளது. இவற்றுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட இல்டசிய வாழ்வும் அவரது படைப்புக்களில் சேர்ந்துள்ளது. இவையே அவரை “காலத்தின் குரலாகப் பேசும்” கவிஞராக ஆக்கியது எனலாம்.

இங்கு நூலுருப் பெறும் உலைக்களம் அவ்வகையில் எழுந்த உணர்வு வரிகளின் தொகுப்பு. அந்தந்த காலத்தய விடுதலைப் போரின் களநிலைகளைத் தழுவிய உணர்வின் குரல்கள்.

காலத்தால் அழியாத கவிஞன் புதுவை இரத்தினதுரை! 2

இந்த உலைக்களத்தின் சிறப்பு என நான் பார்ப்பது இது வெறும் புதுவை இரத்தினதுரை என்ற தனி ஒருவனின் உணர்வின் குரலாக மட்டும் அமைந்து விடாததுதான். மாறாக உலைக்களத்தை ஆழ்ந்து, விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்திப் போகும் உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றில் காணலாம். போராளி நிலையிலோ, பொதுமகனின் நிலையிலோ அல்லது படித்தவரின் நிலையிலோ, பாமரரின் நிலையிலோ எந்த நிலையில் நின்று பார்க்கும் போதும் அவரவரின் உணர்வின் வரிகளாக உலைக்களம் பொருந்தி வரும்.

ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதமென வர்ணிக்கும் விடுதலைப் போரியல் நடவடிக்கைகள் உலைக்களத்தில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகளின் பின்னே உள்ள அர்ப்பணிப்புக்களையும், எம்மினத்தின் உணர்வுகளையும், அரசியல் அர்த்தங்களுடன் உலைக்களத்தில் பதிவாக்கியுள்ளார்.

எமது தலைவர் அவர்கள் உலைக்களத்தை ஒவ்வொரு வாரியாக ஏற்றி, இறக்கி, தணித்து வாசிக்கும் வேளையில் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சிலவேளைகளில் எனக்கென தனியாகக்கூட தலைவர் அவர்கள் வாசித்து காட்டியுள்ளார். தலைவர் அவர்கள் சிறந்த வாசகர் என்பதற்கு மேலாக உலைக்களத்தின் கருத்தோட்டத்தில் மீதான ஈர்ப்பே அதனை அவரை அப்படி வாசிக்க வைத்திருக்குமென நம்புகிறேன்.

“போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர்” எனவும், “எம் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் தமிழீழ இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்த் தேசிய பிரக்ஞையை விழிப்புறச்செய்ய உழைத்தவர்.” எனவும் எம் தேசியத் தலைவர் அவர்களால் விதந்து பாராட்டுப்பெற்ற புதுவை அண்ணரைப் பற்றி நான் சொல்ல என்னதான் உள்ளது?

காலத்தால் அழியாத கவிஞன் புதுவை இரத்தினதுரை! 3

இலக்கிய வித்தகரும், பெரும் கவிஞருமான அவரது நூலுக்கு கருத்து எழுதுவதற்கு வாசகன் என்ற தகுதிநிலை போதுமெனக் கூறிய புதுவை அண்ணரது வார்த்தைக்கு கட்டுண்டு எழுதியுள்ளேன்.

எமது விடுதலைப்போர் எதிர்கால மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாகும் காலம் வரும். அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்துவந்த வரலாற்றுப் பாதையின் போக்குகளையும், இந்த போருடன் வாழ்ந்த மானிடரின் மன உணர்வுகளையும், சொல்லும் பெட்டகமாக உலைக்களம் திகழும் என நம்புகிறேன்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அன்புடன்
ச.பொட்டு அம்மான்
பொறுப்பாளர்
புலனாய்வுத் துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்

முக்கிய குறிப்பு :-

2009 ஆண்டு சர்வதேச துணையுடம் சிங்கள அரசின் மேற்கொண்ட  மிலேச்சத்தனமான  தாக்குதலில்  மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள் இவர்களில் புதுவை  இரத்தினதுரை அவர்களும் அடங்குவார்கள் இவர்களுடன்  காணாமல்போன எம்   தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று சிங்கள அசரே பொறுப்பு கூற வேண்டும் 

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments