”காலம் மாற்றத்தை ஏற்படுத்தும்” ராணி எலிசபெத்!

  • Post author:
You are currently viewing ”காலம் மாற்றத்தை ஏற்படுத்தும்” ராணி எலிசபெத்!

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து, மனைவியுடன் இளவரசர் ஹாரி பிரிந்து செல்வதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக அதிரடியாக அறிவித்தனர்.
அவர்கள் இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத்தையோ, இளவரசர் சார்லஸ் உள்ளிட்டவர்களையோ கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் பொருளாதார சுதந்திரத்தை பெறுகிற வகையில் முழுநேர பணிக்கு செல்லவும், தங்கள் சுய காலில் நிற்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்கள் இங்கிலாந்துக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையே தங்கள் காலத்தை கழிக்க விரும்புகின்றனர்.

இந்த நிலையில், அரச குடும்பத்துடனான இளவரசர் ஹாரி, மேகன் உறவு இனி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ராணி இரண்டாம் எலிசபெத் நேரடியாக தலையிட்டு இணக்கமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளார். இதையொட்டி அவர் நேற்று நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில், அரச குடும்ப உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் இங்கிலாந்து ராணியின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் ஹாரிக்கும், மேகனுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் இருக்க விரும்பிய போதிலும், சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை மதிப்பதாகவும், புரிந்துகொள்வதாகவும் ராணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலம் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரச குடும்பத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் ஹாரியும், மேகனும் கனடாவில் குடியேறும் முயற்சியைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரிந்து செல்வது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள