கேள்விக்குள்ளாகும் நோர்வேயின் எரிபொருள்நிரப்பு நிலையங்களின் எதிர்காலம்!

You are currently viewing கேள்விக்குள்ளாகும் நோர்வேயின் எரிபொருள்நிரப்பு நிலையங்களின் எதிர்காலம்!

புதிய வர்த்தக மேம்பாடுகளை செய்யாவிடின், நோர்வேயில் நிறைந்திருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிரந்தரமாக மூடவேண்டிய நிலைமை ஏற்படலாமென எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, எரிபொருட்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்களவு இலாபத்தை பெறமுடியாதென தெரிவிக்கும் இந்நிலையங்களை நடத்துபவர்கள், விரைவு உணவுகள், புகையிலை உற்பத்திகள், இனிப்புவகைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதிலேயே ஓரளவு இலாபம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

வர்த்தகப்போட்டிகள் மூலம், பாவனையாளர்களுக்கு மலிவுவிலையில் பொருட்கள் கிடைக்கக்கூடிய முறைமையை மேம்படுத்தும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாளாந்த அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களை விற்பனை செய்யும் பெரும் அங்காடிகளில் அவற்றுக்கு அருகாமையில் பாதுகாப்பான இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைத்து, எரிபொருள் விற்பனையிலும் மேற்படி பெரும் அங்காடிகளை இழுத்து விடுவதன் மூலம், வர்த்தகப்போட்டியொன்றை ஏற்படுத்த அரசு முனைவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மேற்படி பெரும் அங்காடிகள் எரிபொருள் விற்பனையில் கால்பதிக்குமானால், எரிபொருள் நிலையங்களை இழுத்து மூடவேண்டி வருமென தாம் அஞ்சுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தங்களது விற்பனையை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மதுபான விற்பனையை அரசு அங்கீகரிக்கவேண்டுமென இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, மதுபான விற்பனை அங்கீகரிக்கப்படுமானால் அதிகமான வாடிக்கையாளர்கள் தம்மிடம் வருவார்களெனவும் தங்கள் நம்புவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், எரிபொருள் விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனையை அங்கீகரிப்பது பற்றி பேசவே முடியாதென அரசுத்தரப்பில் கூறப்படுவதாகவும் தெரிவிக்கப்படுவது.

பகிர்ந்துகொள்ள