கொரோனா தடுப்புப் பணியில் இறந்தால் தியாகி அந்தஸ்து : ஒடிசா முதலமைச்சர்!

  • Post author:
You are currently viewing கொரோனா தடுப்புப் பணியில் இறந்தால் தியாகி அந்தஸ்து : ஒடிசா முதலமைச்சர்!

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்க நேரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கப்படும் என இந்தியாவில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்க நேரும் மருத்துவத்துறையினரின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், அவர்களது இறுதி நிகழ்ச்சியில் முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர்கள் உயிருடன் இருந்தால் ஓய்வுபெறும் காலம் வரையில், குடும்பத்தினருக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஈடு இணையற்ற வகையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்காக சிறப்பு விருதுகள் உருவாக்கப்படும் என்றும் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ, மரியாதைக்குறைவாக நடத்தினாலோ தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள