“கொரோனா” தடுப்பு மருந்துக்கும், மரணங்களுக்கும் நேரடியான சம்பந்தமில்லை!

You are currently viewing “கொரோனா” தடுப்பு மருந்துக்கும், மரணங்களுக்கும் நேரடியான சம்பந்தமில்லை!

“கொரோனா” தடுப்பு மருந்து ஏற்றப்பட்டதன் பின்னதாக மரணமடைந்தவர்கள் பற்றிய சர்ச்சைகள் தொடர்பில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் வெளியிட்ட ஒருமித்த கருத்தின்படி, தடுப்பு மருந்து ஏற்றப்பட்டபின் மரணித்தவர்களின் மரணங்களோடு தடுப்பு மருந்து நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் அரச மருந்தக கண்காணிப்பகம், “கொரோனா” தடுப்பு மருந்தின் பின்விளைவுகள் மிகமிக குறைவானவை என ஆரம்பத்தில் அறிக்கையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஏனைய ஐரோப்பிய நாடுகளும் நோர்வேயின் இந்த அறிக்கையையே பிரதிபலிக்கின்றன.

நோர்வேயில், தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதன் பின்னதாக நடந்ததாக கூறப்படும் 23 மரணங்கள் தொடர்பான தகவல்கள் உலகலாவிய ரீதியில் கவனத்தை பெற்றிருந்த நிலையில், மேற்படி மரணங்கள், தடுப்பு மருந்தின் நேரடியான பாதிப்பினால் நிகழ்ந்தவையல்ல என நோர்வே அரச மருந்தக கண்காணிப்பகம் தெரிவித்திருந்ததோடு, எவ்விதமான தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் வழமையாக ஏற்படக்கூடிய பின்விளைவுகளான காய்ச்சல், வயிற்று உபாதைகள் போன்றவற்றின் காரணமாக, மிகப்பலவீனமான நோயாளர்கள் மரணமாவது தவிர்க்க முடியாததாக இருப்பதையும் நினைவு படுத்தியுள்ளது.

நோர்வேயில் நடந்த மேற்படி மரணங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் அச்ச நிலைப்பாடுகள் தோன்றியிருப்பதையடுத்து, ஐரோப்பிய நாடுகளிடையே விவாதிக்கப்பட்ட இவ்விடயம் தொடர்பில் இப்போது கருத்துரைத்திருக்கும் ஆய்வாளர்கள், மேற்படி மரணங்களுக்கும், “கொரோனா” தடுப்பு மருந்துக்கும் நேரடியான சம்பந்தமெதுவும் கிடையாதென ஏகமனதாக தெரிவித்துள்ளார்கள்.

பிரான்சில் இதுவரை 800.000 பேருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், இதுவரை, மூதாளர் பேணகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த, நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த 9 மூதாளர்கள் மரணமடைந்திருப்பதாகவும், சுவீடனில் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட 13 பேர் மரணித்துள்ளதாகவும், ஐஸ்லாந்தில் 7 பேர் மரணித்துள்ளதாகவும், போர்த்துக்கலில் ஒரு சுகாதார சேவையாளர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், மேற்படி அனைத்து மரங்களுக்கும், “கொரோனா” தடுப்பு மருந்து நேரடியான காரணமாக இருக்கவில்லையென நிறுவப்பட்டுள்ளதாக அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறைகள் தெரிவித்துள்ளன.

பகிர்ந்துகொள்ள