“கொரோனா” தடுப்பு மருந்துகளை பதுக்கும் பணக்கார நாடுகள்!

You are currently viewing “கொரோனா” தடுப்பு மருந்துகளை பதுக்கும் பணக்கார நாடுகள்!

“கொரோனா” தடுப்பு மருந்துகளை, வசதி படைத்த நாடுகள் பதுக்க ஆரம்பித்துள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

“Pfizer” மற்றும் “AstraZeneca” போன்ற நிறுவனங்கள், “கொரோனா” தடுப்பு மருந்துகளை சந்தைப்படுத்தும் நிலைக்கு முன்னேறியுள்ள நிலையில், கனடா தனது தேவைக்கும் அதிகமாக, ஒவ்வொரு கனேடிய பிரஜைக்கும் 5 மடங்கு என்னும் தொகையில் “கொரோனா” தடுப்பு மருந்துகளை வாங்குகிறது என செய்திகள் வெளிவந்திருந்தன.

இதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் மேற்படி நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கு அவசர அவசரமாக அனுமதியை வழங்குவதோடு, பெரும் தொகையில் இத்தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி, வசதி படைத்த நாடுகள் பெரும் தொகையில் “கொரோனா” தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்யும் பட்சத்தில், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு போதியளவு தடுப்பு மருந்துகள் கிடைக்காமல் போகும் அவலநிலை உருவாகுமென “The People’s Vaccine Alliance” எனும் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வசதியுள்ள நாடுகள் பெருந்தொகையில் தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்து பதுக்கும்போது, தடுப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படுமெனவும், இதனால் வறிய நாடுகளில், பத்தில் ஒருவருக்கே தடுப்பு மருந்து கிடைக்கும் நிலை உருவாகும் என்றும், இந்நாடுகளின் பெரும் செல்வந்தர்களுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும், சமூகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கும் மட்டுமே தடுப்பு மருந்துகள் சென்றடையும் வாய்ப்பிருப்பதால் சாதாரண அடிமட்டத்து பிரஜைகளுக்கு தடுப்பு மருந்துகள் எட்டாக்கனியாகவே ஆகிவிடுமெனவும் இவ்வமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, “AstraZeneca” நிறுவனம், தான் தயாரிக்கும் “கொரோனா” தடுப்பு மருந்துகளில் 64 சவீதமான மருந்துகளை வறிய நாடுகளுக்கே வழங்குவதாக தெரிவித்திருந்தாலும், கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், மிகவிரைவில் பாவனைக்கு வரவிருக்கும் தடுப்பு மருந்துகளின் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, பணம் படைத்த நாடுகளின் கைகளுக்கே செல்லும் என்பது தெளிவாகிறதெனவும், இந்நிலை ஏற்படும் பட்சத்தில், உலகெங்கும் வறிய நாடுகளில் வாழும் பல பில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்து கிடைக்காமலேயே போய்விடுமெனவும் “The People’s Vaccine Alliance” அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நோர்வேயின் பிரபல மருத்துவ நெறிமுறை பேராசிரியராக பணியாற்றும் “Kjell Arne Johanson” இவ்விடயம் பற்றி கருத்துரைக்கையில், “கொரோனா” தடுப்பு மருந்து கொள்வனவில் வசதி படைத்த நாடுகளுக்கும், வறிய நாடுகளுக்குமிடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், மிக ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்துமென கவலை தெரிவித்துள்ளார்.

வறிய நாடுகளின், வருமானம் குறைந்த பிரஜைகளும், குறிப்பாக இளைய சமுதாயத்தினரும் தடுப்பு மருந்து கிடைக்காமல் பெருமளவில் இறந்து போய்விடக்கூடிய அபாயம் இருப்பதாகவும், உலக நாடுகளுக்கிடையில் இப்போது இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் மென்மேலும் அதிகரிக்குமெனவும், வறிய நாடுகளின் பொருளாதார நிலை மிகவும் அடிமட்ட நிலைக்கு சென்றுவிடுமெனவும் கவலை தெரிவிக்கும் “Kjell Arne Johanson”, “கொரோனா” தடுப்பு மருந்து கொள்வனவு விடயத்தில் நோர்வே மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டுமெனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

“கொரோனா” பரவலினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொகையை நோர்வே கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியிருக்கும் பேராசிரியர், அதிகளவில் பாதிப்படைந்த நாடுகளுக்கும் கணிசமானளவில் தடுப்பு மருந்துகள் கிடைக்கும் விதத்தில், தடுப்பு மருந்து கொள்வனவில் மட்டுப்படுத்தலை நோர்வே கடைப்பிடிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வசதி குறைந்த நாடுகளுக்கு போதுமானளவு தடுப்பு மருந்துகள் கிடைக்காத பட்சத்தில், அந்நாடுகளில் “கொரோனா” வைரஸை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுமெனவும், இதனால் “கொரோனா” பிரச்சனை உலகளாவிய ரீதியில் நிரந்தரமான பிரச்சனையாக ஆகிவிடுமெனவும், வசதி படைத்த நாடுகளிலிருந்து இந்நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுமெனவும், இந்நாடுகளோடு தொடர்ந்து வர்த்தகத்தொடர்புகளை வைத்திருக்கவோ அல்லது இறக்குமதிகளை மேற்கொள்ளவோ முடியாமல் போகுமெனவும் பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள