“கொரோனா” தொற்றுக்கு ஆளான முதலாவது நபர் என சந்தேகிக்கப்படுபவர் (சீனர்) அடையாளம் காணப்பட்டார்!

You are currently viewing “கொரோனா” தொற்றுக்கு ஆளான முதலாவது நபர் என சந்தேகிக்கப்படுபவர்  (சீனர்) அடையாளம் காணப்பட்டார்!

“கொரோனா” வைரசு தொற்றுக்கு ஆளான முதலாவது நபரான சந்தேகிக்கப்படும் சீனர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“Wuhan” மாகாணத்தின் பிரதான சந்தையான “Huanan” சந்தையில் இறால் விற்பனையாளராக இருக்கும் 57 வயதான “Wei Guixian” என்ற பெண்மணியே “கொரோனா / கோவிட் – 19” வைரசின் பாதிப்புக்கு ஆளான முதல் நபர் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 10 ஆம் நாளன்று, வழமை போல் சந்தையில் இறால் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் தடிமன் போன்ற உணர்வு தோன்றியதாகவும், ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் தடிமன் ஏற்படுவது தனக்கு வழமையானது என்பதால், தான் அதனை பெரிது படுத்தாமல், வியாபாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததாகவும், எனினும், தனது உடல்நிலையில் அசாத்தியமான அயர்ச்சி ஏற்பட்டதால் உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்கு உதவிகளை பெற்ற பின்னர் மீண்டும் சந்தைக்கு சென்று வியாபாரத்தை கவனித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தனது உடல்நிலையில் முன்னேற்றம் வராத நிலையில் வைத்தியசாலைக்கு சென்றபோது அங்கு தனக்கு ஊசிமருந்து செலுத்தப்பட்டதாகவும், அதனாலும் தனது உடல்நிலை முன்னேற்றம் காணாதபடியால், திரும்பவும் இன்னொரு வைத்தியசாலைக்கு சென்றபோது அங்கு தனக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டாலும், நாளுக்குநாள் தனது உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனதால், டிசம்பர் 16 ஆம் நாள், “Wuhan” மாகாணத்தின் மிகப்பிரதானமான வைத்தியசாலைக்கு சென்றபோதே, தன்னை பிடித்திருப்பது வீரியமான வைரசு என தெரிவிக்கப்பட்டதாகவும், தன்னைப்போலவே சுகவீன அறிகுறிகள் கொண்ட பலர் அந்த வைத்தியசாலைக்கு வந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாத இறுதியில் தன்னை தனிமைப்படுத்தி வைத்த வைத்தியர்கள், “Huanan” சந்தையிலிருந்து பரவியதாக சொல்லப்பட்ட “கொரோனா” வைரசுக்கும், தன்னை பிடித்திருந்த நோய்க்கும் தொடர்பிருப்பதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்த குறித்த பெண்மணி, “Wuhan” மாகாணத்தில் “கொரோனா / கோவிட் – 19” வைரசால் பீடிக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்ட முதல் 27 பேரில் தானும் ஒருவராக அடக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த அந்த பெண்மணி தற்போது முழுமையாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த பெண்மணி வியாபாரம் செய்துவந்த “Huanan” சந்தையிலிருந்த பொதுக்கழிப்பறையையே அங்கு வியாபாரங்களை நடத்திவந்த ஏனைய வியாபாரிகளும் பாவித்து வந்ததாக தெரிவிக்கும் இப்பெண்மணி, அந்த பொதுக்கழிப்பறை வாயிலாக பலருக்கு “கொரோனா” தொற்றியிருக்கலாமெனவும் கருதுவதாக தெரிவித்துள்ளதோடு, சீன அதிகாரிகள் விரைந்த நடவடிக்கைகளை நேரகாலத்தோடு எடுத்திருந்தால் “Wuhan” மாகாணத்தில் பல உயிர்கள் பலியானது தடுக்கப்பட்டிருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

“கொரோனா” பரவல் முதல்முதலில் அவதானிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை, 82.000 பேர் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய ரீதியில் 180 நாடுகளில் 6.00.000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 28.00 பேர் இதுவரை மரணமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள