கொரோனா தொற்று நிலமை மோசமாகும்!உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

You are currently viewing கொரோனா தொற்று நிலமை மோசமாகும்!உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், கொரோனா வைரஸ் தொற்று நிலைமை இன்னும் மோசமாகும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்தார்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று இந்த 7 மாதங்களில் உலக நாடுகளையெல்லாம் தன் பிடியில் ஆட்டுவித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் வீரியத்தை கணிக்க முடியாமல் உலகளவில் விஞ்ஞானிகள் கைகளை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தொற்று உலகமெங்கும் 1.31 கோடிப்பேரை பாதித்துள்ள நிலையில், இன்னும் தன் ஆதிக்கத்தை தொடர்ந்து கொண்டு வருகிறது. 5.73 லட்சம் பேர் பலியாகியும் இந்த வைரசின் கோரப்பசி இன்னும் தீரவில்லை.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பற்றி கலவையான தகவல்கள் கூறி வருவது, மக்களின் நம்பிக்கையை குலைப்பதாக உள்ளது. பல நாடுகள் தவறான திசையில் செல்கின்றன. தொற்றை கட்டுப்படுத்த பலரும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

பொது சுகாதார செய்திகளை மக்களுக்கு தெளிவாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற செய்ய வேண்டும். முக கவசம் அணிய வைக்க வேண்டும். கைச்சுத்தம் பராமரிக்க செய்ய வேண்டும். அறிகுறிகள் இருந்தால் வீட்டில் தங்க வைக்க வேண்டும். இவை அனைத்தையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், கட்டுப்பாடுகளை விதித்தவாறு, பொருளாதார, சமூக, கலாசார விளைவுகளை கருத்தில் கொண்டு அரசாங்கங்கள் திறம்பட பதில் நடவடிக்கைகளை எடுப்பது கடினமானதுதான்.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் நமது முதல் எதிரியாக தொடர்கிறது. ஆனால் பல அரசுகளின் செயல்பாடுகளும், மக்களின் செயல்பாடுகளும் இதை பிரதிபலிப்பதாக இல்லை.

அடிப்படை கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தாமல் இருந்தால், அரசாங்கங்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் கொரோனா வைரஸ் தொற்றின் நிலை இன்னும் மோசமாகி விடும்.

எதிர்காலத்தில் பழைய நிலைக்கு உலக நாடுகள் திரும்ப முடியாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவு இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான் நிருபர்களிடம் பேசுகையில், “அமெரிக்காவிலும் சரி, இன்னும் பல பகுதிகளிலும் சரி, கட்டுப்பாடுகளை தளர்த்தியது, கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர பரவலுக்கு வழி வகுத்து விட்டது. பெரும்பாலான பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை விதித்து, ஊரடங்கு போடுவது என்பது பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால், உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது, கொரோனா வைரஸ் பரவலை தணிக்க அவசியமானது” என கூறினார்.

மேலும், “அரசாங்கங்கள் வலுவான உத்திகளை வகுத்து செயல்படுத்த வேண்டும். பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அரசாங்கங்கள் விதிக்கிற கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடப்பது எளிதாகும். இந்த வைரசுடன் நாம் வாழ கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். சில மாதங்களில் வைரசை ஒழித்துக்கட்டுவதோ, தடுப்பூசி கொண்டு வருவதோ சாத்தியமற்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள