“கொரோனா” பிடியில் அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பல்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing “கொரோனா” பிடியில் அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பல்! “கொரோனா” அதிர்வுகள்!!

அமெரிக்க இராணுவத்தின் நாடு நாயகமாக விளங்கும் அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பலான “USS Theodore Roosevelt” கப்பலில் பணியாற்றும் அமெரிக்க படையினருக்கு “கொரோனா” தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 5000 படையினரை கொண்டுள்ள இந்த விமானம் தாங்கிக்கப்பல் வியட்நாமில் தரித்து நின்றபோது அங்கு “கொரோனா” தொற்று ஏற்பட்டிருக்கலாமெனவும், இது தொடர்பில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக அமெரிக்க தலைமைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அணுசக்தியில் இயங்கும் இப்பிரமாண்டமான கப்பலில் இதுவரை 100 படைவீரர்களுக்கு “கொரோனா” தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை கூடுமானவரை தனிமையில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் கப்பலின் வரையறைகளும், கட்டுப்பாடுகளும் அதற்கு ஏதுவாக அமையவில்லையென்றும் தெரிவித்துள்ள கப்பலின் முதன்மை தளபதி, பாதிக்கப்பட்டவர்களை தரையிறக்கி தகுந்த சிகிச்சையளிக்க வேண்டுமெனவும், கப்பலின் ஏனைய படைவீரர்களையும் பரிசோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டுமெனவும் அனுமதி கோரியுள்ளார்.

மேற்கு பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள “Micronesia” என்ற தீவில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு சொந்தமான “Guam” என்ற தளத்தில் தரித்து நிற்கும் மேற்படி கப்பலில் மீதமிருக்கும் படையினருக்கும் “கொரோனா” பரவினால், அமெரிக்க இராணுவ கட்டுமானத்திற்கு பாரிய ஆபத்துக்கள் வருமென தெரிவித்துள்ள “New York Times” பத்திரிக்கை, அமெரிக்க இராணுவ வலிமையின் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டுள்ள மேற்படி “USS Theodore Roosevelt” கப்பல், அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரியாகவிருக்கும் சீனாவை எதிர்ப்பதற்கான அமெரிக்க அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது எனவும் குறிப்பிடுகிறது.

பகிர்ந்துகொள்ள