“கொரோனா” வால் வாழ்நாள் பாதிப்புக்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing “கொரோனா” வால் வாழ்நாள் பாதிப்புக்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” வைரஸினால் தாக்கப்பட்டவர்களுக்கு வேறுவிதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகக்கூடியதாக சுவாசப்பைகளில் தொற்றுதலை ஏற்படுத்தும் “கொரோனா” வைரசுக்கள், காலப்போக்கில் தொற்றுதலுக்கு ஆளானவரின் இதயம், சிறுநீரகங்கள், ஈரல், மூளை, ஹோர்மோன் சுரப்பிகள் போன்றவற்றில் நீண்டகால சேதங்களை ஏற்படுத்துவதோடு, இரத்த சுற்றோட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக, அமெரிக்காவின் “Yale University” பல்கலைக்கழகத்தின் இதயநிபுணர் “Harlan Krumholtz” தெரிவிக்கின்றார்.

சீன வைத்தியர்கள் மேற்கொண்டிருந்த ஆய்வுகளிலும், “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலுறுப்புக்களில் பலவீனங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களின் ஈரல் மற்றும் இதயம் போன்றவை, முன்பிருந்ததை போலல்லாமல் பலவீனமடைந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்கான கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், “கொரோனா” வால் பாதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சையில் இருந்தவர்களினதும், சாதாரண சிகிச்சையில் இருந்தவர்களினதும் சுவாசப்பைகள் தொடர்பான ஊடுகதிர் (X – Ray) படங்கள் ஆய்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களின் சுவாசப்பைகளின் சுவாசக்காற்றை உள்வாங்கும் கொள்ளளவுத்திறன் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

“கொரோனா” வைரசால் பீடிக்கப்பட்டாலும் சுவாச சிக்கல்களோ அல்லது சுவாசப்பையில் தொற்றுதலோ ஏற்படாதவர்களுக்கும் மேற்கூறியபடி உடலுறுப்புக்களின் வினைத்திறன் குறைவும், குறிப்பாக இதயத்தொழிற்பாட்டில் பலவீனம் போன்றவை அவதானிக்கப்படுவது தம்மை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் தெரிவிக்கும் வைத்தியர்கள், சுவாசப்பைகள் தொற்றுதலுக்கு உள்ளாகும்போது, உடலுக்கு தேவையான உயிர்வாயுவை (ஒட்ஸிசன்) வழங்க முடியாமல் சுவாசப்பைகள் பலவீனமடைவதால் இதயமும் பலவீனமடைகிறது எனவும், ஆகக்கூடியதாக இதயத்தின் இயக்கம் நின்றுவிடும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மருத்துவ சிகிச்சைகள் மூலமாக இப்படியானவர்களின் இதயத்தொழிற்பாடு வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும், “கொரோனா” வைரஸின் வீரியமான தாக்கமானது, நீண்ட நெடுநாள் நிலைக்கக்கூடிய (Chronic) இதய நோயை கொண்ட நோயாளிகளின் தொகையை அதிகரிக்கும் எனவும் வைத்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“கொரோனா” வைரஸ் சீனாவிலிருந்து பரவத்தொடங்கி 3 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், வைரஸால் பீடிக்கப்பட்டு குணமடைந்த யாரும் நீண்டகாலம் உயிர்வாழ்ந்தமைக்கான உறுதியான பதிவுகளெதையும் மேற்கொள்ள முடியாத இன்றைய நிலையில், வைரஸால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அவசர உயிர்காப்பு சிகிச்சைகளை வழங்குவதோடு, அவர்களுக்கான கண்காணிப்புக்களை கொடுப்பதில் தமது வினைத்திறன்களை செலவிட்டுவரும் வைத்தியர்கள், வைரஸால் பீடிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடல்களில் “கொரோனா” வைரஸ் தொடர்ந்தும் உறங்கு நிலையில் இருக்குமா என்பதும், உடல்களில் உறங்கு நிலையிலிருக்கும் வைரசுக்கள், பிறிதொரு காலத்தில் வேறு வடிவத்தில் வெளிப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்குமா என்பதும் பெரும் கேள்விகளாக முன்னிற்கின்றன எனவும் கவலை தெரிவிக்கிறார்கள்.

“சின்னம்மை” நோயை தருவிக்கும் “Herpes Virus / ஹெர்பெஸ் வைரஸ்”, மனித உடலில் பல்லாண்டுகளுக்கு தங்கிவிடுவதோடு, மிகுந்த வலிகளை கொடுக்கக்கூடிய விதத்தில் மீண்டும் தாக்குவதையும் …

“Hepatitis – B” நோயை கொண்டுவரக்கூடிய வைரசுக்கள் பீடிக்கப்பட்டவர்களின் உடல்களில் பல்லாண்டுகள் மறைந்திருப்பதோடு ஈரல் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதையும் …

மேற்கு ஆப்பிரிக்காவை தாக்கிய “Ebola / எபோலா” வைரசுக்கள் நோயாளிகளின் உடல்களில் தங்கியிருந்து, பிற்காலத்தில் பலரது பார்வைகளை பறித்துள்ளளோடு, மேலும் பலருக்கு பார்வைக்குறைபாடுகளை உண்டாக்கியதையும் வைத்தியர்கள் உதாரணங்களாக குறிப்பிடுகிறார்கள்.

https://www.nrk.no/video/3a6d0686-89b0-4e15-8bb8-49fc2fcaf8d1

பகிர்ந்துகொள்ள