கொரோனா வைரஸ்: நான்கு ஆசியப் புலிகள் கற்றுத் தந்த பாடம்!

You are currently viewing கொரோனா வைரஸ்: நான்கு ஆசியப் புலிகள் கற்றுத் தந்த பாடம்!

ஆசியப் புலிகள் என்று அழைக்கப்படும் தைவான், சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகளிடமிருந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவும் பிற நாடுகளும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அந்தப் பாடங்களை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் முதலில் அலட்சியம் செய்துவிட்டன. இதன் விளைவாக, கரோனா வைரஸ் முதலில் தொற்றிய சீனாவைக் காட்டிலும் ஐரோப்பிய நாடுகள் அதிக உயிரிழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

சீனாவில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களைக் காட்டிலும் மற்ற நாடுகளில் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில்தான் இந்த வைரஸின் வேகம் பெரும் பாய்ச்சலாக இருக்கிறது. இத்தாலியும் ஸ்பெயினும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றிலும் நோய்த்தொற்று அளவு அதிகம். உயிரிழப்பில் முதலில் நிற்கிறது இத்தாலி. சீனாவைவிட அதிகம் பேர் இத்தாலியில்தான் இறந்துள்ளனர்.

மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இது தொற்றுகிறது என்று ஜனவரி 20-ல் சீனா அறிவதற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் வெப்பத் திரையிடல் மூலம் அனைத்துப் பயணிகளையும் வைரஸ் தொற்று இருக்கிறதா என்று சோதிக்கத் தொடங்கிவிட்டது தைவான். ஜனவரி இறுதியிலிருந்தே தன் நாட்டு எல்லைகளை மூடிவிட்டது. வைரஸ் தொற்று குறித்தும் நோயின் அறிகுறி, தன்மைகள், விளைவுகள் குறித்தும் மக்களுக்கு விரிவாக எச்சரித்தது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டியது, இருமல்-தும்மல்களின்போது நீர்த்திவலைகள் மேலே படாமலிருக்க முகக்கவசம் அணிவது என்று மக்களிடம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விவரித்தது. தங்கள் நாட்டுக்குள் வைரஸ் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னதாகவே அது தொடர முடியாமல் வாய்ப்புகளைத் துண்டித்துவிட்டது.

சிங்கப்பூர் ஒரு படி மேலே சென்றது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து யாரும் சிங்கப்பூர் வர பிப்ரவரி முதல் வாரத்திலேயே தடை விதித்தது. சிங்கப்பூரில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ததுடன் சிகிச்சையை இலவசமாகவே அளித்தது. குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு அன்றாடம் 100 டாலர் உதவித்தொகை தந்து வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை கூறியது. ஹாங்காங்கும் சீனாவுடனான தொடர்புகளை பிப்ரவரி 5 முதல் 14 நாட்களுக்குத் துண்டித்துக்கொண்டது. பள்ளி, கல்லூரிகளை மூடியது. மக்கள் வீடுகளிலிருந்து வேலைசெய்ய வழியிருந்தால் செய்யுமாறு அறிவுறுத்தியது. மக்கள் வெளியே வரத் தடை விதித்தது. தென் கொரியாவும் மக்கள் அனைவரையுமே மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தியது. மக்கள் வெளியே செல்லத் தடை விதித்தது.

இந்த நாடுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நாடுகள் இன்று அலறுகின்றன. மருந்தே கண்டுபிடிக்கப்படாத தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க வேண்டும் என்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதும் தீவிர சிகிச்சை அளிப்பதும்தான் முக்கியம். அதை நான்கு ஆசிய நாடுகளும் உலகுக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றன. இந்தியா முழு அளவில் தயாராக வேண்டும். மிக முக்கியமாக, உயிர் காக்கும் உபகரணங்களுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை நாடெங்கும் உருவாக்க வேண்டும்.

பகிர்ந்துகொள்ள