சமஷ்டியை கூறிய மோடியிடம் 13 ஐக் கேட்பதா?

You are currently viewing சமஷ்டியை கூறிய மோடியிடம் 13 ஐக் கேட்பதா?

யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2015 இலங்கை வந்திருந்த பாரதப் பிரதமர் என்னுடைய 13 வருட முதலமைச்சர் கால அனுபவத்தில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு கூட்டு சமஸ்டி முறையே பொருத்தமானதென இலங்கை நாடாளுமன்றத்தில் தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னார். அவ்வாறு கூறுபவரிடம் 13ஆம் திருத்தத்தை அமல்படுத்த கோரி நாம் கடிதம் எழுதுவது எந்தளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்கள். இதன்போது முஸ்லிம் தரப்புகள் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த சகோதரர்களும் இணைந்துள்ளனர்.

முஸ்லிம்களின் அபிலாஷைகள் வித்தியாசமானது. அதேபோல மலையக தமிழர்களது அபிலாஷைகள் வித்தியாசமானது வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களது அரசியல் அபிலாஷைகள் வித்தியாசமானது.

ஒரு வாரத்துக்கு முன்னர் ஒரு வரைவு தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு வாரத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வரைபை ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய உயர்மட்டக்குழு கூட்டத்தில் அது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டாவது வரைபு பற்றியும் இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது.

முதலாவது வரைபில் உள்ள பல விடயங்கள் இல்லாமலாக்கப்பட்டு வெறும் கண்துடைப்புக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுவதாக அந்த வரைவு காணப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழு ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கு சமஸ்டியையே முன்வைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என கூறவில்லை. அதேபோல நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்தவும் கூறத் தேவையில்லை. தேர்தல் சட்டங்களின் படி நடத்தியிருக்க வேண்டும்.

இந்திய பிரதமரிடம் தேர்தலை நடத்துங்கள் என்று கட்சிகள் கோருவதில் நியாயம் இல்லை. அதை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

வெளியில் ஓர் மாயை உண்டு அதாவது ரெலோ கொண்டு வந்த நல்ல விடயத்தை தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பதாக எண்ணுகின்றனர் அது தவறு.

இந்தியாவின் கொல்லைப்புறம் வரையில் இன்னுமோர் நாடு வந்த பின்பும் அயல் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என இந்தியா தொடர்ந்தும் கூறப்போகின்றதா என்பதனை இந்தியாதான் சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments