சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகும் அமெரிக்க அதிபர்!

You are currently viewing சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகும் அமெரிக்க அதிபர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் மேற்கொண்டதாக சொல்லப்படும் போரியல் விதிமுறை மீறல்கள் அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து வரும், சர்தேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள்மீது தடைகளை விதித்து கடந்த 11.06.20 அன்று, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இக்கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி, நீதிமன்றத்தின் உறுப்பினர்களுக்கெதிராக தடைகளை விதித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவிலுள்ள அவர்களின் சொத்துக்களை தடுத்து வைக்கும் உத்தரவையும் விடுத்திருந்ததோடு, அவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குமான நுழைவு அனுமதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

அமெரிக்க பிரஜைகள்மீது மேற்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை என்ற பெயரில் பயமுறுத்தல்கள் விருப்பத்தை அனுமதிக்க முடியாதென, மேற்படி அதிபரின் உத்தரவை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் “Mike Pombeo” தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகும் அமெரிக்க அதிபர்! 1

எனினும் அதிபர் டிரம்ப் இன் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்திருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதிமன்றத்தின் மேல் பல தடவை இவ்வாறான செயற்பாடுகளை அமரிக்கா மேற்கொண்டு வந்திருப்பதாகவும், இவ்வாறான செயற்பாடுகள், நீதிமன்றத்தின் சுயாதீனமான செயற்படுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களையும், செயற்படுகளையும் பாதிப்பதாக அமைகிறதெனவும் கண்டித்துள்ளது.

மேற்படி அதிபர் டிரம்ப் இன் இந்நடவடிக்கையானது, நீதிமன்றத்தின் உறுப்பினர்களின் சுயாதீனமான விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்திருக்கும் நீதிமன்றம், இவ்வாறனான இடையூறுகள், உலகம் முழுவதிலும் போர்க்குற்றவியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கான நீதி கிடைக்காமல் செய்வதோடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையையும் சிதைத்துவிடுமெனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து, 2014 ஆம் ஆண்டுவரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையினரும், அமெரிக்க உளவுத்துறையும் மேற்கொண்டதாக சொல்லப்படும் போர் விதிமுறைமீறல்கள் அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை, கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தினால் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்தே, அதிபர் டிரம்ப் மேற்படி உத்தரவை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவிடயம் தொடர்பில் கருத்துரைத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறையமைச்சர் “Josep Borrell”, அமெரிக்க அதிபரின் இச்செயற்பாடு, மிகவும் ஆபத்தானதென தெரிவித்திருக்கிறார்.

உலகம் முழுவதிலும் போர்க்குற்றங்களுக்கு ஆளாக்கப்படுபவர்களின் நியாயங்களுக்காக அயராது அழைத்துவரும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மதிக்கப்படுவதோடு ஊக்கப்படுத்தவும் வேண்டுமெனவும், அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் செயற்பாடுகளை முடக்கும் ஆபத்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, உலகெங்கும் நடைபெறக்கூடிய போர்க்குற்றங்கள், போர்விதிமுறை மீறல்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றங்கள் மீது சுயாதீன விசாரணைகளை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதன்பின் சர்வதேச ஒத்துழைப்பு ஒப்பந்தங்களிலிருந்து அமெரிக்கா விலகி வருவது உற்று நோக்கத்தக்கது. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான “பாரீஸ் ஒப்பந்தம், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம், ரஷ்யாவுடனான அணுவாயுத குறைப்பு ஒப்பந்தம் போன்றவற்றிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளதோடு, சர்வதேச ஏதிலிகள் தொடர்பான அமைப்பு, “யுனெஸ்கோ” போன்றவற்றிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டுள்ளதோடு, உலக சுகாதார நிறுவனத்துடனான தனது தொடர்புகளையும் துண்டிக்கப்போவதாக அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பொறுத்தவரை, அமெரிக்கா இதுவரை தன்னை இந்நீதிமன்ற நடவடிக்கைகளோடு இணைத்துக்கொள்ளவில்லை என்றாலும், அமெரிக்காவுக்கெதிரான விசாரணைகளெதுவும் முன்னெடுக்கப்படாதென நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் முன்னதாக தனக்கு உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கும் அமெரிக்கா, அமெரிக்கப்படைகள்மீதான விசாரணைகளை மேற்கொள்ள முனையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், எதிர்வரும் காலங்களில் தனது நட்புநாடுகள் மீதும், குறிப்பாக, ஆப்கானிஸ்தான் விடயத்தில் தனக்கு உதவிய “நேட்டோ” உறுப்பு நாடுகள் மீதும் இவ்வாறான விசாரணைகளை தொடரலாமெனவும் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் உள்ளிட்ட, அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடுகள் மீது, போர்விதிமுறை மீறல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென, நீதிமன்றத்தின் பிரதான உறுப்பினர்கள் கடந்த வருடமே நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்ததையடுத்து, மேற்படி உறுப்பினர்களுக்கான அமெரிக்க உள்நுழைவு அனுமதியை அமெரிக்கா இரத்து செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளையில், மேற்படி நீதிமன்றம் அமெரிக்க பிரஜைகளை விசாரிப்பதென்பது அமெரிக்காவின் சிறப்பம்சத்திற்கு ஊறு விளைவிக்கும் என தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் “Mike Bombeo”, தமது பிரஜைகள் தொடர்பான விடயங்களை அமெரிக்காவே கவனித்துக்கொள்ளும் எனவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற்த்திற்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடெதுவும் அமெரிக்காவுக்கு இல்லை என்றும் நீதிமன்றமானது முறைகேடுகள் மலிந்து கிடக்கும் அமைப்பாக உள்ளதெனவும் சாடியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள