சர்வதேச மட்டத்தில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படும் நிலை!

You are currently viewing சர்வதேச மட்டத்தில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படும் நிலை!

சர்வதேச மட்டத்தில் சிறிலங்கா  தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மாத்திரமே அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெனிவா பிரேரணை குறித்து அரசாங்கம் முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா  தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானதாகும்.

ஜெனிவா விவகாரம் மாத்திரமல்லாது வெளிவிவகாரக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தற்போது எடுக்கும் தீர்மானங்கள் முற்றிலும் முரண்பாடான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

சர்வதேசத்தில் இலங்கை இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் காட்டிக்கொடுக்கவில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயலாளர் நாயகம் பன்கீ மூனிடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அவை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டு ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பாளியாகக் காணப்பட்டார்.

யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் இல்லை.

இதன்காரணமாகவே நாட்டுத் தலைவரும், இராணுவ அதிகாரிகளும் மின்சாரக் கதிரைக்குச் செல்லவேண்டிய நிலை தோற்றம்பெறும் என்ற கருத்தும் அப்போது குறிப்பிடப்பட்டன. சர்வதேச பொறிமுறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஜெனிவாவின் அழுத்தமான நிலைப்பாடாக இருந்தது.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றவுடன் சர்வதேச உறவினைப் பலப்படுத்த வேண்டிய தேவையும் காணப்பட்டது.

சர்வதேச விசாரணைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் இலங்கையிலே உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் இலங்கையின் பொது சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எவ்வித பாரபட்சமும் காட்டாது என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நல்லாட்சி அரசாங்கம் 30/1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியது” என அவர் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள