சர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதி கிடைக்கும் !!

You are currently viewing சர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதி கிடைக்கும் !!

சர்வதேச விசாரணை ஊடாகவே தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு நீதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி இ. சிறீஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2, 2006 ஆம் ஆண்டு திருகோணமலைக் கடற்கரையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 15 ஆம் வருடத்தினை ஜனவரி 2, 2021 இல் நாம் நினைவேந்துகின்றோம்.

இம்மாணவர்களின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பன்னிரெண்டு படையினர் உட்பட சாதாரண காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம் சாட்டி விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்த போதிலும் ”போதுமான சாட்சியங்கள் இல்லை” என்ற காரணத்தினால் அவர்கள் கடந்த ஜூலை 03, 2009 இல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அடக்குமுறைக்கு எதிராகத் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களின் தன்னெழுச்சியை அடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் படுகொலையைச் செய்தவர்கள் யார் என்பதைச் சிறீலங்காவின் நீதிப்பொறிமுறையால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருப்பதானது மிகப்பெரும் கேள்வியோன்றை ஈழத்தமிழ் மக்களின் முன்னே விட்டுச்சென்றிருக்கின்றது.

இவ் ஐந்து மாணவர் படுகொலைக்கு முன்னராகவும் பின்னராகவும், 2009 ஆம் ஆண்டில் சிறீலங்கா அரசின் ஆசீர்வதிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இனப்படுகொலைக்கும் உள்நாட்டு நீதிப்பொறிமுறை நீதி வழங்குமா என்பதே அக்கேள்வி. அந்தக் கேள்விக்கு பதிலாக சிறீலங்காவின் நீதிப்பொறிமுறை என்றுமே தமிழ்மக்களுக்கான நீதியை வழங்கப்போவதில்லை என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

மிருசுவில் படுகொலைக் குற்றவாளிக்குச் சிங்களப் பேரினவாத அரச தலைவர் பொதுமன்னிப்பை வழங்கிய போது தமிழர் இனப்படுகொலைக்கு அரசின் ஆதரவு எத்தகையது என்பதையும் தமிழர்கள் சரியாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

சிறீலங்கா அரசானது சர்வதேசத்தின் கண்களுக்கு மண்ணைத்தூவி ஐநாவின் மனித உரிமைச் சபையில் மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைத் திட்டங்களைத் தனது தொல்பொருள், மகாவலி, வன இலாக மற்றும் கரையோரப்பாதுகாப்புத் திணைக்களங்களின் ஊடாக   முன்நகரத்திவருகின்றது.

இவற்றுகான நிதி ஒதுக்கீடுகள் 2021 ஆம் ஆண்டுப் பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களுக்கு மிகவும் ஏமாற்றம் தரும் விடயமாக தமிழர்களால் தமது சுயநிரணய உரிமையைப் பெற்றுத்தர முயற்சிப்போம் என்ற தேர்தல் பிரசாரத்தின் ஊடாக ஆணையைப் பெற்ற தரப்பொன்று அப் பாதீட்டினை எதிர்த்து வாக்களிக்காது ஒளிந்தோடியுள்ளது.

இவ்வாறு எதிர்த்து வாக்களிக்காது ஒளிந்தோடியமையானது அத்தரப்பும் சிங்களப் பேரினவாத அரசுடன் இணைந்து தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தமிழ்மக்கள் அனைவரும் சர்வதேச விசாரணையைக் கோரிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச விசாரணை ஊடாகவே தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு நீதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இன்று பதினைந்து ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்டுள்ள இம் மாணவர் படுகொலைக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் கண்கூடு.

எனவே மக்களே சர்வதேச விசரணையைக் கோரி அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரளுங்கள்.

பகிர்ந்துகொள்ள