சிங்கள பௌத்த நாடாக ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை!

You are currently viewing சிங்கள பௌத்த நாடாக ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை!

இலங்கை என்பது பன்மொழி, பல்லின மற்றும் பல் கலாசார நாடாகும். மாறாக இதனை சிங்கள, பௌத்த நாடு என்றோ அல்லது தனியொரு இனம் மற்றும் மொழியைக் கொண்ட நாடு என்றோ ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாரில்லை. என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், சிறுபான்மையின மக்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகள், இன நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கையிலேயே தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் விவகார முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் முன்னிலையில் அவரால் எடுத்துரைக்கப்பட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் வருமாறு,

இந்த ஆணைக்குழுவின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய ‘முன்னோக்கிப் பயணித்தல்’ என்ற விடயம் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் முன்னோக்கிப் பயணித்தல் என்பது மிகவும் அவசியமானதொன்றாகும்.

என்னைப் பொறுத்தமட்டில் இலங்கை என்பது பன்மொழி, பல்லின மற்றும் பல்கலாசார நாடாகும். மாறாக இதனை சிங்கள, பௌத்த நாடு என்றோ அல்லது தனியொரு இனம் மற்றும் மொழியைக்கொண்ட நாடு என்றோ ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாரில்லை. இங்கு சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் அரசகரும மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் காணப்படுகின்றது. அதன்படி பன்முகத்தன்மை என்பது எமது நாட்டின் பலமாகும்.

ஆனால் அதனைப் பலவீனமாகக் கருதியதன் விளைவாகவே மிகச்சிறந்த பல விடயங்களை நாம் தவறவிட்டுவிட்டோம். குறிப்பாக ‘தேசபிதா’ டி.எஸ்.சேனாநாயக்கவின் நடவடிக்கையினால் 1948 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளி தமிழ்மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமையும், எஸ்.டிபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் தனிச்சிங்களச்சட்டம் கொண்டுவரப்பட்டமையும் தமிழ்மக்களை வேதனைக்குட்படுத்தும் விடயங்களாக அமைந்தன.

டி.எஸ்.சேனாநாயக்கவின் நடவடிக்கைக்கு எதிராக அரசியல் தலைவர்கள் இணைந்து காலிமுகத்திடலில் நடத்திய போராட்டத்தில் எனது பாட்டனார் பழனிசாமி பிள்ளையும் பங்கேற்றிருந்தார். அதேபோன்று தனிச்சிங்களச்சட்டத்திற்கு எதிராக தந்தை செல்வா உள்ளிட்ட தலைவர்கள் காலிமுகத்திடலில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இப்போது காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்மக்கள் ஏன் பெருமளவிற்கு அக்கறை காண்பிக்கவில்லை என்று சிங்கள மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். ‘கடந்த சில மாதங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டின் காரணமாக தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் தமிழ்மக்களுக்கு இந்தப் போராட்டங்கள் புதிதல்ல’ என்பதே அந்தக் கேள்விக்கு எனது பதிலாக இருந்திருக்கின்றது.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்த மக்களின் எண்ணிக்கையை விடவும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான உணவுப்பொருட்களையே அரசாங்கம் அங்கு அனுப்பிவைத்தது. இவையனைத்தும் மிகமோசமான அரசாங்கங்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும். எனவே பல காலமாக மின்சாரம், உணவு போன்ற அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளமுடியாத நிலையிலிருந்த தமிழ்மக்களுக்குத் தற்போதைய நெருக்கடிகள் புதிதல்ல.

அதேபோன்று மலையகத் தமிழ்மக்களும் பெருமளவான நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்துவருகின்றனர்.

அவர்களுக்குரிய பாடசாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட நாட்டின் தேசிய செயற்திட்டத்தின்கீழ்க் கொண்டுவரப்படவில்லை. ‘எங்களையும் தேசிய நீரோட்டத்தினுள் உள்வாங்குங்கள். எங்களையும் இலங்கையர்களாக அங்கீகரியுங்கள். எம்மையும் மாவட்ட செயலகம் மற்றும் நகரசபை ஆகிய கட்டமைப்பின்கீழ் கொண்டுவாருங்கள்’ என்பதே மலையக மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

இவையனைத்திற்கும் அடிப்படைக்காரணம் இனவாதம் மாத்திரமேயாகும். எனவே இது சிங்கள, தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க நாடு என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதுமாத்திரமன்றி இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப் பயணிப்பதற்கும் மேலும் சில விடயங்களுக்கு மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும்.

முதலாவதாக இன, மத, மொழி அடையாளங்களுக்கு அப்பால் நாமனைவரும் ‘இலங்கையர்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்துவதும் இன்றியமையாததாகும். அதேபோன்று நாட்டின் பன்முகத்தன்மையை அங்கீகரித்தல், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து அனைவருக்கும் சட்டத்தை ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தல், அனைத்துத் தரப்பினருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பனவும் பூர்த்திசெய்யப்படவேண்டும்.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்படவேண்டும். நீண்டகாலமாக சிறையிலிருக்கும் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

அதன்படி அதிகாரப்பரவலாக்கம் உறுதிசெய்யப்படுவதுடன், காலந்தாழ்த்தப்பட்டுள்ள மாகாணசபைத்தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேபோன்று தற்போது தனிச்சட்டங்களாக இருக்கக்கூடிய கண்டியச்சட்டம், தேசவழமைச்சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் என்பன ஓர் முறையான கலந்துரையாடலின் பின்னர் அனைவருக்கும் ஏற்றவாறானதும் பொருத்தமானதுமான பொதுச்சட்டமாக மாற்றியமைக்கப்படுவதைத் தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments