சிறீலங்காவிற்கு சுற்றுலா வரவேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்!

You are currently viewing சிறீலங்காவிற்கு சுற்றுலா வரவேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்!

சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் இம்மாதம் 21 ஆம் திகதி விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தை தவிர ஏனைய சகல நாடுகளிலிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தர முடியும்.

எனினும் இதன் போது 3 தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளல் உள்ளிட்ட 3 முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்று இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.

இம்மாதம் 21 ஆம் திகதி முதல் சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட கலந்துரையாடலொன்று 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட போது இதனைக் கூறிய அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்பட்டவுடன் சகல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தர முடியும்.

இங்கிலாந்திலிருந்து மாத்திரம் யாரும் வருகை தர முடியாது. சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கமைய கடந்த 14 நாட்களாக பிரித்தானியாவிலிருந்த எவருக்கும் நாட்டுக்கு வர முடியாது.

இதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகிய இரண்டுமே திறக்கப்படும்.

எந்த நாட்டிலிலுருந்து வந்தாலும் சகல சுற்றுலா பயணிகளும் 3 பிரதான விடயங்களில் அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டுக்கு வருவதற்கு முன்னர் ஹோட்டலொன்றை பதிவு செய்திருத்தல் , விசேட கொவிட் காப்புறுதி செய்திருத்தல் மற்றும் தமது நாட்டிலிருந்து இலங்கைக்கான விமானத்தில் ஏறுவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் என்பன அந்த 3 முக்கிய விடயங்களாகும்.

விசேட கொவிட் காப்புறுதி பற்றி கூறும் போது நாட்டுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனையின் போது தொற்றுறுதி செய்யப்பட்டால் அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லல், தனியார் வைத்தியசாலையில் அல்லது இடைநிலை பராமரிப்பு நிலையங்களில் அனுமதித்து சிகிச்சை பெறுதல் மற்றும் அறிகுறிகள் எவையும் இன்றி தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் தொற்றாளர் விரும்பும்பட்சத்தில் பதிவு செய்துள்ள ஹோட்டல் அறையிலேயே தங்கி சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்டவற்றுக்கு குறித்த காப்புறுதி பயன்படும்.

சுற்றுலா பயணிக்கு நாட்டுக்கு வந்த பின்னர் தொற்றுறுதி செய்யப்பட்டால் அரசாங்கத்திற்கு சுமை அற்ற வகையில் தனியார்துறைதுறையூடாகவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். பி.சி.ஆர். பரிசோதனைகளும் அரசாங்கத்திற்கு சுமையற்ற வகையிலேயே முன்னெடுக்கப்படும்.

நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாதாரணமாக சமூகத்திற்குள் செல்ல வேண்டுமாயின் அவர்கள் நிச்சயம் 14 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் குறுகிய காலத்தில் சுற்றுலா பிரயாணத்தை நிறைவு செய்ய வேண்டுமென அவர்கள் விரும்பினால் பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் சுகாதாரத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ள ‘பயோ பபல்’ செயற்திட்டத்திற்கமைய சுற்றுலாவை நிறைவு செய்யலாம்.

இதன் போது அவர்கள் சமூகத்துடன் தொடர்பை பேண முடியாது. நாம் முழு நாட்டுக்கும் உதவும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக் கோவை பரந்துபட்டதாகும். எனவே சில சந்தர்ப்பங்களில் வருகைதரவிருந்த சுற்றுலா விமானங்கள் இரத்து செய்யப்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

பகிர்ந்துகொள்ள