சிறீலங்கா காவற்துறைக்கு சர்வதேச மன்னிப்பச்சபை கண்டனம்!

You are currently viewing சிறீலங்கா காவற்துறைக்கு சர்வதேச மன்னிப்பச்சபை கண்டனம்!

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு முந்தைய தினம் இரவு அமைதிப்போராட்டக்காரர்கள்மீது பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்புக்கூறச் செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அவ்வாறிருக்கையில் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளுக்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தும், முறையற்ற நிர்வாகம் மற்றும் அடக்குமுறைகள் போன்றவற்றுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியும் கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள எல்பின்ஸ்ட் அரங்குக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை சத்தியாக்கிரகப்போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், சத்தியாக்கிரகப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது நீர்த்தாரைப்பிரயோகம் நடாத்தியதுடன் அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதன்போது 4 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் குறித்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, 75 ஆவது சுதந்திரதினத்தையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்குப் பொதுமக்கள் கொண்டிருக்கும் உரிமைக்கு முற்றிலும் முரணான வகையில் இலங்கை பொலிஸாரால் சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதன்முறையல்ல என்றும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ‘நாம் பார்வையிட்ட காணொளியின் பிரகாரம், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி கைது நடவடிக்கையின்போது தடியடிப்பிரயோகம் நடாத்தப்படுவதையும் அவதானிக்கமுடிகின்றது’ என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, கைதுசெய்யப்பட்டவர்களைப் பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

‘அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு அதிகாரிகள் மதிப்பளிப்பது அவசியம் என்பதுடன் அதனைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்’ என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments