சீனாவோடு விளையாடாதீர்! பிரித்தானியாவை எச்சரிக்கும் சீனா!!

You are currently viewing சீனாவோடு விளையாடாதீர்! பிரித்தானியாவை எச்சரிக்கும் சீனா!!

“ஹாங்காங்” தொடர்பாக சீனா முன்மொழிந்த சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியப்பிரதமருக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா முன்மொழிந்த “ஹாங்காங்” கின் சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்பு சட்டம், ஏற்கெனவே சீனாவுக்கும், பிரித்தானியாவுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்டிருந்த “ஹாங்காங்” தொடர்பான உடன்படிக்கையை மீறுவதாக இருப்பதால், மேற்படி புதிய பாதுகாப்புச்சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், “ஹாங்காங்” இல் வாழும், பிரித்தானிய நுழைவு அனுமதியை வைத்திருக்கும் சுமார் 3 மில்லியன் “ஹாங்காங்” வாசிகளுக்கு நிரந்தர பிரித்தானிய குடியுரிமை வழங்கி, அவர்களை பிரித்தானியாவுக்குள் உள்வாங்கிக்கொள்ள இருப்பதாக அண்மையில் பிரித்தானியா தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலடியாகவே, சீனா இப்போது இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பல்லாண்டுகளாக பிரித்தானியாவின் ஆளுமைக்கு கீழிருந்த “ஹாங்காங்”, 1997 ஆம் ஆண்டில் சீனாவிடம் கையளிக்கப்பட்டபோது, “ஹாங்காங்” கின் இறைமையும், தன்னாட்சி உரிமையும் தொடர்ந்து பேணப்படுவதோடு, நாடாளுமன்றம், நீதித்துறை உட்பட, ஒரு தனி நாட்டுக்குரிய அம்சங்களை கொண்டிருக்கும் “ஹாங்காங்”, குறைந்தது 50 ஆண்டுகளுக்காவது அந்த அம்சங்களை தொடரவேண்டும் என்பது போன்ற பிரதானமான அம்சங்கள், பிரித்தானிய – சீன ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், சீனாவின் பொறுப்பில் “ஹாங்காங்” ஒப்படைக்கப்பட்டதும், தனது முழு ஆதிக்கத்தையும் “ஹாங்காங்” மீது செலுத்துவதோடு, சீனாவின் பிரதேசமாகவே “ஹாங்காங்” ஐயும் இணைத்துக்கொள்ளவே சீனா விரும்பியது. இதை எதிர்த்து “ஹாங்காங்” மாணவர்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, “ஹாங்காங்”இன் இறைமை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், தனியான நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சீனாவோடு விளையாடாதீர்! பிரித்தானியாவை எச்சரிக்கும் சீனா!! 1

மாணவர்களின் போராட்டங்களை காவல்துறையின் இரும்புக்கரங்களை கொண்டு அடக்கிவரும் சீன அரசு, “ஹாங்காங்” மீதான தனது ஆட்சியதிகாரத்தை மேலும் இறுக்கமாக்கும் பொருட்டே மேற்படி சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்பு சட்டமூலத்தை சீன நாடாளுமன்றத்தில் முன்மொழிந்திருந்தது.

இச்சட்ட மூலத்தின்படி, சீனாவுக்கெதிரான தேசத்துரோகம் இழைப்பது, சீனாவிலிருந்து “ஹாங்காங்” தனியாக பிரிந்து செல்லுதல் உள்ளிட்ட விடயங்கள் தடை செய்யப்படுவதோடு, இதுவரை “ஹாங்காங்” இற்கு இருந்துவந்த சிறப்பம்சங்கள் வலுவற்றதாகவும் ஆக்கப்பட வழிவகை செய்யப்படுவதோடு, சீன ஆதிக்கத்துக்கெதிராக “ஹாங்காங்” இல் நடைபெறும் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் அடக்கியொடுக்குவதற்கு சீன பாதுகாப்புப்படைகள் நேரடியாக தலையிடும் உரிமையையும் சீனாவுக்கு வழங்குகிறது.

அத்தோடு, “ஹாங்காங்” நாடாளுமன்றத்தேர்தல்களில் யார்யார் போட்டியிடலாமென்பதும் சீன அரசின் பரிசீலையின் பின் சீன அரசே முடிவு செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ஹாங்காங்” இல் நடைபெறும் குற்றவியல் விசாரணைகளை அனைத்தும் சீனாவுக்கு மாற்றப்படும் வகையில், கடந்த வருடம் சீனா சட்டமூலம் ஒன்றை முன்மொழிந்தபோது, “ஹாங்காங்” இல் ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரமடைய தொடங்கியிருந்ததால் விரைந்த நடவடிக்கையொன்றை எடுப்பதன் மூலம் “ஹாங்காங்” போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவரும் அவசரம் சீனாவுக்கு ஏற்பட்டதன் விளைவே இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலம்.

தவிரவும், சீனத்தலைமைகளை விமர்சித்து வெளியிடப்படும் ஆவணங்கள் சீனாவில் தடைசெய்யப்பட்டுவரும் நிலையில், அவையனைத்தும் “ஹாங்காங்” கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்படுவதும் பல்லாண்டுகளாக சீனாவின் கண்களை உறுத்தி வந்திருக்கிறது. “ஹாங்காங்” வரும் சீனர்கள், அங்கு விற்பனை செய்யப்படும் இவ்வாறான ஆவணங்களை தேடித்தேடி வாங்குவதால் சினம் கொண்டிருந்த சீனா, அத்தனையையும் சேர்த்தே அடக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

சீனாவோடு விளையாடாதீர்! பிரித்தானியாவை எச்சரிக்கும் சீனா!! 2

சீன நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய புதிய சட்டமூலத்தின் பிரகாரம் இதுவரைநாள் இருந்துவந்த “ஒரு நாடு; இரு தேசம்” என்ற தத்துவம் இல்லாதொழிக்கப்பட்டு சீனாவுடன் “ஹாங்காங்” இணைக்கப்பட்டு ஒரே நாடாக ஆக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

“ஹாங்காங்” சீனாவுடன் இணைக்கப்படுவதை அமெரிக்காவும், பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் மிகக்கடுமையாக எதிர்க்கின்றன. சீனாவின் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுமானால், “ஹாங்காங்” இங்கு அமெரிக்க வழங்கியுள்ள சிறப்பு வர்த்த சலுகைகள் நிறுத்தப்படுமென அமெரிக்கா தெரிவித்திருந்தது. மேற்படி அமெரிக்காவின் சிறப்பு வர்த்தக சலுகைகளும், “ஹாங்காங்” இந்த பொருளாதார மையமும் சீன பொருளாதாரத்துக்கு முக்கியமானவையென அமெரிக்கா கருதுகிறது.

சினந்து போயுள்ள பிரித்தானியா, 3 மில்லியன் “ஹொங்கொங் மக்களுக்கு பிரித்தானிய குடியுரிமை வழங்குவதாக தெரிவித்து சீனாவை சீண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமோ, சீனாவின் இந்நடவடிக்கை, தன்னாட்சி தொடர்பில் உலகநாடுகள் கையாளும் நடைமுடைகளில் சேதங்களை ஏற்படுத்துமென விசனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தனக்கெதிராக கருத்து தெரிவித்துள்ள மேற்குலக நாடுகளை சீனா கடும் தொனியில் எச்சரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள