சுற்றுப்பயணத்தில் வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்படலாம் ; அதிபர் டிரம்ப்!

  • Post author:
You are currently viewing சுற்றுப்பயணத்தில் வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்படலாம் ; அதிபர் டிரம்ப்!

இந்திய சுற்றுப்பயணத்தில் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உறுதி செய்யப்படலாம் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.  டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார்.  வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லியுடன் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கும் செல்கிறார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் அமையும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.  இந்த பயணம் பற்றி கடந்த வாரம் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டனர் என்றும் தெரிவித்து உள்ளது.

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப் விருந்து வழங்கினார்.  இந்த பயணத்தில் பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் ’ஹவுடி மோடி’ என டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்திய பயணம் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில், அதிபர் டிரம்ப் தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.  அவர் கூறும்பொழுது, அவர் (பிரதமர் மோடி) மிக நல்ல மனிதர்.  இந்தியாவுக்கு செல்லும் நாளை நான் எதிர்நோக்கியுள்ளேன்.  இந்த மாதஇறுதியில் நாங்கள் அங்கு செல்ல இருக்கிறோம் என கூறினார்.

அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசும்பொழுது, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படலாம் என கூறினார்.

அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சந்து, டிரம்பின் பயணம் பற்றி கூறும்பொழுது, டிரம்பின் இந்திய வருகையானது, மோடி மற்றும் டிரம்ப் ஆகியோருக்கு இடையேயான தனிப்பட்ட வலுவான நட்புறவின் பிரதிபலிப்பு என கூறினார்.

இந்த நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர்கள் விரும்புகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த பயணம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள