ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.!

You are currently viewing ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.!
Captain Jeyanthan Regiment

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.ஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்டியது. 

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! 1

விடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறு படைத்துறை ரீதியில் உயர்நிலை பெறுவதற்கு அடித்தளமாய் அமைந்தது, அதன் படைத்துறைக் கட்டமைப்பே ஆகும். இவ்வகையில் விடுதலைப்புலிகளின் படையணிகளின் உருவாக்கமும் அவற்றின் செயற்திறண்மிக்க செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனடிப்படையில், விடுதலைப்புலிகளின் மரபுசார் படைத்துறை திறணாற்றலுக்கு வலுச்சேர்த்த படையணிகளுள் ஜெயந்தன் படையணி சிறப்பிடம் பெறுகின்றது. பொதுவாக ஒரு மரபுவழிப் படையணியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பச் சமர்க்களங்களில் உயர்நிலைப் பெறுபேறுகளைப் பெறுவதென்பது மிக அரிதானதே. ஆனால் ஜெயந்தன் படையணியைப் பொறுத்தவரை அது தனது முதற் சமரிலேயே தன்னை ஒரு உயர்நிலை சமராற்றல் மிக்க, அதீத போர்க்குணம் மிக்க படையணியாக வெளிக்காட்டி நின்றமை வியப்பிற்குரியதே.மட்டக்களப்பு – அம்பாறை போர்ப் பிராந்தியத்தில் ஒரு கரந்தடி அமைப்பின் உச்சநிலை வளர்ச்சியை எட்டியிருந்த சண்டை அணிகள், பூநகரி ‘தவளை’ நடவடிக்கைக்காக ஒன்றிணைக்கப்பட்டு தலைமையினால் ஒரு படையணிக் கட்டுமாணத்துள் கொண்டுவரப்பட்டன. புதிய சூழல், புதிய படையணிக் கட்டுமாணம், படைத்துறைசார் நடைமுறைகள், கடின பயிற்சிகள் என்பன ஒரு வேறுபட்ட நடைமுறைச் சூழலுக்கு அவர்கள் தம்மை உடன் இசைவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையை ஏற்படுத்தின.ஒரு கரந்தடி வீரன் சந்திக்கக்கூடிய உச்ச கடின சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அதில் போதிய பட்டறிவைப் பெற்றிருந்த அவ்வீரர்களுக்கு தங்களை இந்தப் புதிய நடைமுறைச் சூழலுக்கு இசைவாக்கிக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் எழவில்லை.   

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! 2

ஜெயந்தன் படையணி தோற்றம்பெற்ற காலத்தில் இருந்தே அப்படையணியில் “படையணி மனோபாவம்” அல்லது “குழு உணர்வு” ஒரு மேம்பட்ட நிலையில் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அத்துடன் சமர்க்களங்களில் அதன் “தீவிர மூர்க்கச் செயற்பாடுகள்”, “போர்க்குணம்” என்பன அப்படையணியின் தனித்துவமான இயல்புகளாக இனங்காணப்பட்டன. ஜெயந்தன் படையணி எத்தரையமைப்பிலும் சமரிடக் கூடிய, பட்டறிவை, தகைமையைப் பெற்றிருந்மையானது அதன் சமராற்றலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்ததுகுறிப்பிடத்தக்கது. மட்டு – அம்பாறை போர்ப்பிராந்தியத்தின் தரைத்தோற்றமானது காடுகள், மலைகள், பரந்த வெளிகள் போன்ற எத் தரையமைப்பிலும் செயற்படத்தக்க அறிவை, அனுபவத்தை அவர்களுக்கு ஊட்டியிருந்தது. நீர்சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய தமது இயலுமையை முதற்சமரிலேயே ஜெயந்தன் படையணி வெளிக்காட்டியது. மேற்குறித்த சாதகமான காரணிகள் பின்நாளில் அப்படையணி யாழ்.குடாநாட்டு வெளிகளிலும், வன்னிப் பெருநிலக் காடுகளிலும் ஈரூடக நடவடிக்கைகளிலும் திறம்படச் செயலாற்ற பேருதவியாய் அமைந்தன.பூநகரி நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் குறிப்பிடத்தக்க சமர்க்களங்கள் அனைத்திலும் பங்குகொண்டு தனது சமராற்றலை மேலும் வளர்த்ததெடுத்த ஜெயந்தன் படையணி, ஒவ்வொரு களத்திலும் தனது தனித் தன்மையினை நிரூபித்தே வந்தது. தமிழீழ விடுதலைப்போர் வன்னிப் பெருநிலக் களங்களில் மையங்கொண்டதன் பின், வன்னிப் பெருநிலப்பரப்பில் ஓயாத அலைகள் ஒன்றுடன் புதிய போரரங்கு திறக்கப்பட்டபோது மிகப்பலம் வாய்ந்ததொரு படையணியாய் அது வளர்ச்சி கண்டிருந்தது.  

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! 3

ஜெயந்தன் படையணி வன்னிப் பெருநிலப்பரப்பில் சமர் முன்னெடுப்புக்களிலும், முறியடிப்புக்களிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தது. இப்படையணியின் பெயர் உள்நாட்டில் மட்டுமன்றி உலகநாடுகளிலும் அடிபடத்தொடங்கிய ஆண்டாக 1997 அமைந்தது. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் மிகப்பெரும் போர் நடவடிக்கையாக அமைந்த ‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை ஆரம்பமானபோது அதை எதிர்கொள்ள எம் தலைவன் வகுத்த வியூகத்தில் பிரதானமானதொரு சக்தியாக ஜெயந்தன் படையணி திகழ்ந்தது. வருடக்கணக்கில் நீண்ட பாதுகாப்புச் சமர்களிலும் சரி, வலிந்த தாக்குதல்களிலும் சரி ஜெயந்தன் படையணி முன்னிலை வகித்துச் செயற்பட்டது.   

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! 4

இந்த வன்னிச் சமர்க்களத்தில் பாதுகாப்புச் சமர், படை முன் நகர்வு முறியடிப்பு, வலிந்த தாக்குதல்கள் என மரபுவழிப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஜெயந்தன் படையணி, மரபுசாரா நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. சிறு குழு நடவடிக்கை என்ற வகையில், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்துவதிலும் ஜெயந்தன் படையணியின் பிரிவுகள் வன்னிச் சமர்க்களத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுவந்தன. விசேட வேவு அணியினருடன் இணைந்ததான இந் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பெறுமதியான விளைவுகளையும் பெற்றுத்தந்தன. ஓயாத அலைகள் – 03இன் போதும் இத்தகைய அணிகள் ஆழ ஊடுருவி நடவடிக்கைக்குப் பலம் சேர்த்தன. கரும்புலி அணிகள் முன்னெடுத்த சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஜெயந்தனின் வீரர்கள், தளபதிகள் இணைந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்..

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! 5

‘சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்’ என பெருந் தலைவனால் குறிப்பிடப்பட்ட ஜெயசிக்குறு எதிர்ச் சமரிலும் ஓயாத அலைகள் – 2, 3 ஆகிய பாரிய வலிந்த தாக்குதல் முன்னெடுப்புக்களிலும் ஜெயந்தன் படையணி பல முனைகளிலும் ஒரே நேரத்தில் சண்டையிட்டமையானது அதன் பலத்தையும் வலுவாற்றலையும் எடுத்துக்காட்டுவதாய் அமைந்தது. தொடர்ந்தும் ஆனையிறவிற்கான சமர், குடாநாட்டு நடவடிக்கைகள் என ஜெயந்தன் படையணி ஓய்வின்றி களமாடியது. பின்நாளில் ஜெயந்தன் படையணியின் வீரர்கள் மத்தியில் ஜெயசிக்குறு பற்றிக் கருத்துக்கூறிய தேசியத் தலைவர் “இது உங்களின் சமர் என்று கூறக் கூடியளவிற்கு இச்சமரில் நீங்கள் சாதித்துள்ளீர்கள்” என கூறியிருந்தமை வன்னிச் சமர்க்களத்தில் ஜெயந்தன் படையணியின் தாக்கம் எத்தகையது என உணர்ந்துகொள்ள போதுமானதாகும்.1993.05.04 அன்று கட்டமைக்கப் பெற்ற ஜெயந்தன் படையணி தனது 12 வருடகால ஓய்வற்ற சமர்க்களப் பயணத்தில் சாதித்தவை சாதாரணமானவையல்ல. இப் படையணி இத் தேசவிடுதலைப்போரில் ஆற்றிய பங்கு பற்றித் தேசியத் தலைவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டவை ஜெயந்தன் படையணி வரலாற்றில் மட்டுமன்றி எமது போராட்ட வரலாற்றிலும் மிக முக்கியம் வாய்ந்த பதிவுகளாகும்.   

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! 6

‘ஜெயந்தன் படையணி அது தோற்றம்பெற்ற காலத்திலிருந்தே எதிரியின் நிலைகள்மீது இடைவிடாது தாக்குதல் தொடுத்தது…. கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களில் இருந்து மரபுவழிச் சமர்வரை ஜெயந்தன் படையணி சிறப்பாகச் செயலாற்றியது…. இப்படையணியின் போராளிகளும் தளபதிகளும் போர்க்கலையில் வல்லவர்கள், அபார துணிச்சல் மிக்கவர்கள். இவர்களின் இந்தப் போர்ப்பண்புகளுக்கு எதிரி பயப்படுகின்றான்’. என தேசியத்தலைவர் இப்படையணி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.எமது இலட்சியப் பயணத்தில் என்றுமில்லாதவாறு ஒரு மாபெரும் துரோகம், மட்டக்களப்பில் கருணா என்ற பெயரில் அரங்கேறியபோது, ஜெயந்தன் படையணி அதை எதிர்கொண்டவிதம், அதன் கடந்த கால சமர்க்களச் சாதனைகளை விஞ்சிநின்றது. இதுபற்றி தலைவர் குறிப்பிடுகையில், 

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! 7

‘ஜெயந்தன் படையணியின் பேராற்றலையும், இலட்சிய உறுதியையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் உலகமே தன் கண்ணால் நேரடியாகக் கண்டது. மட்டக்களப்பு மண்ணிலே எமது போராட்டத்திற்கெதிராகப் பெரும் துரோகம் நிகழ்ந்தபோது ஜெயந்தன் படையணி வெளிக்காட்டிய வீரமும், கொள்கைப்பற்றும் என்றுமே பாராட்டிற்குரியவை.’தலைமையின் இந்த உள் மனவெளிப்பாட்டிற்கு ஏற்றவகையில் ஜெயந்தன் படையணி என்றும் செயற்படும் என்பதை 04.05.2005 அன்று மட்டக்களப்பு தரவைப் பகுதியில் சிறப்புற நடைபெற்ற படையணியின் 12வது வருட நிறைவு நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. வனமும் வயலும் மலையும் சூழ்ந்த ஜெயந்தன் படையணியின் அந்தப் பிரதான தளத்தில் தமிழீழ தேசியக்கொடி உயர்ந்து பறந்துகொண்டிருக்க ஜெயந்தன் வீரர்கள் கம்பீரமாய் அணிவகுத்து வந்த காட்சி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உயிரொடுங்கும் செய்தியொன்றைஉறைக்க உரைத்திருக்கும்.

ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! 8

 “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” ஆக்கம்:- சுரேன்.வெளியீடு :விடுதலைப்புலிகள் 2005 இதழ்“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள