ஜெர்மனியின் கறுப்புக் காட்டினுள் ஒளிந்திருந்த ‘ரம்போ’ பிடிபட்டார்

You are currently viewing ஜெர்மனியின் கறுப்புக் காட்டினுள் ஒளிந்திருந்த ‘ரம்போ’ பிடிபட்டார்

காவல்துறையின்  துப்பாக்கிகளைப் பறித்துக் கொண்டு காட்டுக்குள் தப்பியோடி தலைமறைவாகிய நபர் ஒருவரை ஆறுநாட்கள் நீடித்த தீவிர தேடுதலின் பின்னர் ஜெர்மனியப் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

31 வயதான அந் நபர் கடந்த ஞாயிறன்று ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் Oppenau என்ற கிராமத்தில் வைத்து காவல்துறை அதிகாரிகள் நால்வரை அச்சுறுத்தி அவர்களது துப்பாக்கிகளைப் பறித்துக் கொண்டு அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடித் தலைமறைவாகி இருந்தார்.

பிரான்சின் எல்லையில் இருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கறுத்தக் காடு (Black Forest) வனப்பகுதிக்குள் ஒளிந்திருந்த அந்த நபரைத் தேடிப் பிடிப்பதற்காக கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் உலங்குவானூர்தி  மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

படையினர் அணிவது போன்ற உருமறைப்புச் சீருடையை ஒத்த உடையுடன் துப்பாக்கிகள், கத்தி மற்றும் அம்பு, வில் கோடரி போன்ற ஆயுதங்களுடன் காணப்பட்ட அந்த நபரை ஜெர்மனிய ஊடகங்கள் ‘கறுத்தக் காட்டு ரம்போ’ (‘Black Forest Rambo’) என்று வர்ணித்து வந்தன.

ஏற்கனவே பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்த அவர் பொதுமக்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் எனக்கருதிய காவல்துறையின்ர் காட்டுப் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இறுதியில் பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை மர வீடு ஒன்றில் ஒளிந்திருந்த அந் நபரை காவல்துறையினர் திடீரெனப் பாய்ந்து மடக்கிப் பிடித்தனர். பெரும் எதிர்ப்புக் காட்டாமலேயே அவர் காவல்துறையினரின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் வசம் இருந்த ஆயுதங்களும் மீட்கப்பட்டன.

Yves Rausch என்று அழைக்கப்படும் இந்நபர் காட்டுவாசி போன்ற குணங்குறிகளுடன் வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிகளில் பொழுதைக் கழிப்பவர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் தற்போது போதைப் பொருள் பாவனை மற்றும் மனநலப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள