ஜேர்மனியிடம் நட்ட ஈடு கோரும் போலந்து, கிரீஸ் மற்றும் நமீபியா!

You are currently viewing ஜேர்மனியிடம் நட்ட ஈடு கோரும் போலந்து, கிரீஸ் மற்றும் நமீபியா!

இரண்டாம் உலகப்போரின்போது, சுமார் ஆறு மில்லியன் போலந்து மக்கள், ஜேர்மனிய நாசிப்படைகளால் கொல்லப்பட்டமைக்கும், போலந்துக்கு ஜேர்மனி ஏற்படுத்திய சேதங்களுக்கும் நட்ட ஈடாக, ஜேர்மனியிடமிருந்து அண்ணளவாக 1.375 பில்லியன் அமெரிக்க டொலர்களை போலந்து கோரியுள்ளது.

ஜேர்மனியினால் போலந்து முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு, கடந்த செப்டெம்பர் மாதத்தோடு 83 வருடங்கள் நிறைவு கண்டுள்ள நிலையில், போலந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மேற்படி தீர்மானத்திற்கு அமைவாக, போலந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர், ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நட்ட ஈடு கோரலுக்கான ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின்போது, 01.09.1939 அன்று போலந்தை ஆக்கிரமித்த ஜேர்மனிய நாசிப்படைகள், போலந்தில் வாழ்ந்த யூதர்கள் உட்பட சுமார் 6 மில்லியன் போலந்து மக்களை படுகொலை செய்திருந்ததோடு, ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் நாசிப்படைகளால் கைது செய்யப்பட்டு போலந்தின் வதை முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு வைத்து நச்சுவாயு ஊட்டப்பட்டு மேலும் பல யூதர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1939 ஆம் ஆண்டில் முதன்முதலில் போலந்து மீது குண்டுகளை வீசிய ஜேர்மனி, 1944 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளுக்கிடையில் போலந்து மீது வீசிய குண்டுகளால் போலந்தின் “வார்ஷாவா” நகரத்தின் 85 சதவீதமான பகுதிகள் நாசமாக்கப்பட்டன எனக்குறிப்பிடும் அறிக்கைகள், மேற்படி ஜேர்மனியின் தாக்குதல்களின் காரணமாக, போலந்தில் சுமார் 1.62.190 குடியிருப்புக்கள், 14.000 தொழிற்சாலைகள், 3.53.876 விவசாயப்பண்ணைகள், 1.99.751 அங்காடிகள் சேதமானதாகவும் கணக்கெடுப்புக்கள் காட்டுவதாக சுட்டிக்காட்டுகின்றன.

ஜேர்மனியிடம் நட்ட ஈடு கோரும் போலந்து, கிரீஸ் மற்றும் நமீபியா! 1
“வார்ஷாவா” நகரத்தின் இடிபாடுகள்.

தமது நாட்டில் ஜேர்மனி மேற்கொண்ட படுகொலைகள், அழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புக்களுக்கு ஜேர்மனி நட்ட ஈடு வழங்க வேண்டுமென 1953 ஆம் ஆண்டில் அன்றைய போலந்து அரசு ஜேர்மனியிடம் கோரிக்கையை முன்வைக்க முயன்ற போது, அன்றைய சோவியத் ஒன்றிய அரசின் அழுத்தங்கள் காரணமாக அவ்வாறான நட்ட ஈடு எதையும் ஜேர்மனி போலாந்துக்கு கொடுக்கத்தேவையில்லை என அன்றைய போலந்து அரசு முடிவு செய்திருந்ததாக குறிப்பிடப்படும் அதேநேரம், சோவியத் ஒன்றியத்தின் அழுத்தங்கள் காரணமாக அன்று எடுக்கப்பட்ட போலந்தின் முடிவு இப்போது செல்லுபடியற்றதாக கருதப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள தற்போதைய போலந்து அரசு, மேற்படி நட்ட ஈடுக்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளது.

எனினும், 1953 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றிய அரசின் அழுத்தங்கள் காரணமாக, ஜேர்மனி தனக்கான நட்ட ஈடெதையும் வழங்கத்தேவையில்லை என போலந்து எடுத்திருந்த முடிவை சுட்டிக்காட்டும் ஜேர்மனி, அவ்வொப்பந்தம் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக தான் கருதுவதால், தற்போது போலந்துக்கு நட்ட ஈடு வழங்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளதோடு, போலந்தின் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உயிர் தப்பியவர்களுக்கு கடந்த காலங்களில் சுமார் 80 பில்லியன் யூரோக்களை நட்ட ஈடாக வழங்கியுள்ளதாகவும், தவிரவும், இவ்வாறு வதை முகாம்களிலிருந்து உயிர்தப்பி, முதுநிலையில் உலகெங்கும் பரந்து வாழ்பவர்களின் நலன்களை கவனிக்கவென சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஏற்கெனவே இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில், போலந்து மேலதிகமான நட்ட ஈடு கோருவதை ஏற்க முடியாதெனவும் கூறியுள்ளது.

இதேவேளை, போலந்தை தொடர்ந்து கிரீஸ் நாடும் 300 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாக கோரி, ஜேர்மனியிடம் 2015 ஆம் ஆண்டில் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், 1904 – 1908 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் நமீபியாவில் ஜேர்மனி மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்புக்களுக்கும், படுகொலைகளுக்குமான நட்ட ஈடாக 01 பில்லியன் அமெரிக்க டொலர்களை நமீபியாவுக்கு வழங்க ஜேர்மனி ஒத்துக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments