டைம்ஸ் சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர்!

  • Post author:
You are currently viewing டைம்ஸ் சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு;

நாடு முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் தீவிர போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டம் சில இடங்களில் வன்முறையாக வெடித்தது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பல பகுதிகளில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
உத்தரபிரதேசத்தின் லக்னோ, அலிகார் பகுதிகளில் நடந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவி பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தும், போலீசார் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். சில இடங்களில் ரப்பர் குண்டுகள் மூலம் போலீசார் சுட்டனர்.
இந்த போராட்டத்தில் 19க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.  260க்கும் அதிகமான போலீசார் காயம் அடைந்தனர்.  218 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கு எதிராக பீகார் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்பின்னர் வடகிழக்கு மாநிலமான அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அமைதி திரும்பியது.  அசாமில் அமைதியான முறையில் சில இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன.  தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதீய ஜனதா சார்பில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
இதேபோன்று மராட்டியத்தின் நாக்பூர் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லோக் அதிகார் மஞ்ச், பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற அமைப்புகளும் பேரணியாக சென்றன.  மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பேரணி நடத்தப்பட்டது.
நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளிலும் இந்த சட்டம் பற்றி பரவலாக பேசப்பட்டு உள்ளது.  இதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய வம்சாவளியினர் பேரணியாக திரண்டனர்.
குடியுரிமை திருத்த சட்டம் மனித உரிமைகள் பற்றியது.  சிறுபான்மையினரை படுகொலை செய்ய தெய்வ நிந்தனை சட்டத்தினை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது, கடந்த 1947ம் ஆண்டில் 23 சதவீதம் என்ற அளவில் இருந்த சிறுபான்மையினர் இப்பொழுது 1 சதவீதம் அளவிலேயே உள்ளனர் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி அவர்கள் திரண்டு இருந்தனர்.

பகிர்ந்துகொள்ள