தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

  • Post author:
You are currently viewing தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தமிழையும், தமிழர்களையும் உலகறியச்செய்த கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் மகா குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட பெருவுடையார் கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்றன. கோபுரங்கள் சீரமைப்பு, சாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான குடமுழுக்கு திருப்பணிகள் மும்முரமாக நடந்தன.

கும்பாபிஷேகத்தையொட்டி நந்தி மண்டபம் முன்பு இருந்த பழைய கொடிமரம் அகற்றப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 அடி உயர தேக்கு மரத்தில் புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டு கடந்த 27-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! 1

இன்று கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முதலே தஞ்சை மட்டுமில்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தஞ்சைக்கு வரத் தொடங்கினர். இதேபோல் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தனர். இன்று காலையில் இருந்தே தஞ்சையில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! 2

கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜையுடன் தொடங்கியது. 335 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் கலந்து கொண்டு ஹோமம் நடத்தினர்.

காலை 7 மணி முதல் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண கோவிலுக்குள் வரிசையாக அனுப்பப்பட்டனர். நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை கட்டுக் கடங்காத அளவுக்கு காணப்பட்டது. அவர்களை காவல் துறையினர் கடும் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட 705 கலசங்களை காலை 7.30 மணியளவில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், முக்கிய பிரமுகர்கள் யாகசாலையில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் தொடங்க தயாரானது. 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்தை காணப்போகிறோமே என மக்கள் பக்தி பரவசத்துடன் காத்திருந்தனர். சரியாக 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் பெருவுடையார் சன்னதியான 216 அடி உயர ராஜ கோபுரத்தின் மீது புனித நீருடன் ஏறினர். பாதுகாப்பு கருதி அவர்களுடன் 2 காவல் துறையினர் சென்றனர். ஒவ்வொரு படியாக சிவாச்சாரியார்கள் ஏறிச் சென்றபோது பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை விண்ணை முட்டும் அளவுக்கு எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ராஜ கோபுரகலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். இதேபோல் மற்ற சன்னதி கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் நடைபெற்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து பெரிய கோவிலில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அதனை தலைவணங்கி ஏற்று சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்ந்துகொள்ள