தடுப்பு மருந்துகளில் இருந்து தப்பிக்க உருமாற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing தடுப்பு மருந்துகளில் இருந்து தப்பிக்க உருமாற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸ்!

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாய், மூக்கு மற்றும் கண்களின் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், ஸ்பைக் (Spike) என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற புரதத்தின் மூலம் மனித உயிரணுக்களோடு இணைகின்றது. இந்த இணைவு வெற்றிகரமாக நடந்தவுடன், வைரஸ் தனது மரபணுவை மனித உயிரணுக்களுக்குள் புகுத்தும். மனித உயிரணுக்குள் நுழையும், கொரோனாவின் மரபணு, அந்த உயிரணுவை வைரசின் இனப்பெருக்க தளமாக மாற்றுகிறது. இப்போது பாதிக்கப்பட்ட உயிரணு, ஒரு வைரசாகவே மாறி, பல்கிப் பெருகுகின்றது .

பொதுவாக வைரசுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரசின் ஸ்பைக் (கொக்கி) புரதம் குறித் தகவலை உடலுக்கு அளிக்கிறது. அதனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸ் நுழையும் போது ஸ்பைக் (கொக்கி) புரதத்தை அடையாளம் கண்டு, மனித உயிரணுக்கள் அதனுடன் இணைவதை தவிர்க்கின்றன. ஆனால், கொரோனா வைரசின் இந்த ஸ்பைக் (கொக்கி) புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும், 62 நாடுகளில் 5349 கொரோனா மாதிரிகளை சோதனை செய்த விஞ்ஞானிகள் அதன் மரபணுவில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், இதன் காரணமாக ஸ்பைக் (கொக்கி) புரதம் தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரசின் ஸ்பைக் (கொக்கி) புரதத்தின் தற்போதைய வடிவத்தின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஸ்பைக் (கொக்கி) புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வது, அந்த தடுப்பு மருந்துகளை பயனற்றதாக மாற்றி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால், உருமாற்றம் நடைபெறாத வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, தடுப்பு மருந்துகள் தயாரிப்பவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனோ வைரசில் ஏற்படும் மரபணு மாற்றங்களையும் கருத்தில்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு தொகுப்பாக பிரித்துள்ளனர். அதில் ஒரு தொகுப்பில் உள்ள 788 வகையான வைரசிலும் மற்றொரு தொகுப்பில் 32 வைரசிலும் இந்த உருமாற்றம் நிகழ்ந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

“உருமாற்றம் நடைபெறாத வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் நிலை ஏற்படலாம்!”

பகிர்ந்துகொள்ள