தந்தை செல்வா 43 வது நினைவு வணக்கநாள்!!

You are currently viewing தந்தை செல்வா 43 வது நினைவு வணக்கநாள்!!

ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) 43 வது நினைவு வணக்கநாள் இன்றாகும்.

தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார்.

அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் கல்வி கற்று மேன் மக்களாக விளங்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.
 
அக்காலகட்டத்தில் பாடசாலைகள் குறைவு. இருந்த சில நல்ல பாடசாலைகளும் அரச குடும்பத்தினரையும் பெரிய பணக்காரக் குழந்தைகளையுமே அனுமதித்தன. எனவே, வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்களை கல்வி கற்பதற்காக மலேசியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார்கள். அப்பொழுது எமது கதாநாயகன் செல்வநாயகத்திற்கு வயது நான்கு.
 
தனது இரண்டு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் மலேசியாவிலிருந்து கொழும்புக்கு கப்பலில் வந்திறங்கினான் பாலகன் செல்வநாயகம். அப்போது கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படாமையினால் மீண்டும் கப்பலிலேயே காங்கேசன்துறைக்கு வந்து தமது சொந்த ஊரான தெல்லிப்பழைக்கு வந்தார்.

அங்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இந்த அமெரிக்க மிஷன் பாடசாலை தான் பின்பு யூனியன் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட் டது கவனத்திற்குரியதாகும். சிறு வயதிலே செல்வநாயகம் பெண் வேடம் பூண்டு நாடகங்களில் நடித்தாராம்.
 
ஐந்தாம் வகுப்பிற்குப் பின்னர் செல்வநாயகம் யாழ்ப்பாணம் சென்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து சீனியர் கேம்பிரிட்ஜ் பரீட்சைக்குப் படிக்கத் தொடங்கினார்.

பின்னர் மாமனார் எஸ்.கே. பொன்னுசாமியின் உதவியுடன் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியில் சேர்ந்து தமது கல்வியைத் தொடர்ந்தார்.
 
சென். தோமஸ் கல்லூரியில் ஏறத்தாழ ஒன்றரை வருட காலம் கல்வி கற்று இன்டர்சயன்ஸ் பரீட்சையில் தேறிய செல்வநாயகம் தனது தம்பிமாரைப் படிப்பிப்பதற்காக 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
 
ஆசிரியராக இருந்துகொண்டே இலண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.ஸி. விஞ்ஞானப் பட்டப்பரீட்சைக்கு வெளிவாரி மாணவனாகத் தோற்றி அடுத்த ஆண்டே அதாவது, 1918இல் சித்தி எய்தினார்.
 
இத்தருணத்தில் மலேசியாவிலிருந்த அவரது தந்தையார் சுகவீனமுற்றிருந்தமையால் அவரைப் பார்க்க மலேசியா சென்று சுமார் ஒரு மாதம் வரை தங்கியிருந்து மீண்டும் திரும்பினார்.

ஆனால்,என்ன பரிதாபம்! செல்வநாயகம் இலங்கை திரும்பி வந்த ஓரிரு வாரங்களிலேயே அன்னாரது தந்தையார் மலேசியாவில் காலமானார்.
 
அதனால் குடும்பப் பொறுப்பு அனைத்தும் இளைஞரான செல்வநாயகத்தின் மேல் சுமத்தப்பட்டது. தமது பிற்காலத்தில் இலங்கைத் தமிழினத்தின் பொறுப்பெல்லாவற்றையும் சிரமேற் கொண்ட தமிழ்த் தந்தைக்கு தந்தையில்லாத குடும்பத்தின் பொறுப்பைச் சுமப்பதா பெரிய காயம்! இரண்டு தம்பிமாரையும், அருமைத் தங்கையையும் அரவணைத்துக் கொண்டு கொழும்பு சென்ற்.தோமஸ் கல்லூரியில் தமது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார்.
 
எனினும், அன்னாருக்கு சோதனை தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் அவரது இளைய சகோதரருக்கு கடும் சுகவீனம்.
 
அவரைப் பார்ப்பதற்கு தெல்லிப்பழை செல்ல லீவு கேட்டார், லீவு மறுக்கப்பட்டது. ஆசிரியர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தெல்லிப்பழைக்குச் சென்றார்.
 
தம்பியை நன்கு பராமரித்தும் என் செய்வது? பலனில்லாமல் போய்விட்டது. அருமைத்தம்பி இராஜசுந்தரம் தமது பதினைந் தாவது வயதில் காலமானார்.
 
தம்பியின் இறுதிச் சடங்கு முடிந்து மீண்டும் கொழும்பு வந்த செல்வநாயகம், வெஸ்லி கல்லூரியில் ஆசிரியரானார். எஸ்.ஜே.வி. ஆசிரியனாக இருந்த காலத்தில் ~நல்லாசிரியன் என்ற பெயரை பெற்றோர்,

ஆசிரியர்,மாணவர்களிடம் பெற்றார். பிற்காலத்தில் நல்ல,நேர்மையான சட்டத்தரணி என்று பெயரும் புகழும் பெற்றாரோ, அரசியலில் நுழைந்த பின்னர் எவ்வாறு உலக மக்கள் அனைவராலும் தமிழ் பேசும் மக்களின் தன்னிகரில்லாத் தலைவன் என்றும், நேர்மையான அரசியல்வாதி என்றும் பெயரும் புகழும் பெற்றாரோ அதே போல அவர் நல்லாசிரியன் என்று பெயரும் புகழும் பெற்றதில் எவ்வித ஆச்சரியமும் இருக்க முடியாது என்பது திண்ணம்.
 
அந்தக் காலத்தில் செல்வா ஆசிரியராக உலா வந்தபோது அன்னாரது நடை, உடை, பாவனையைப் பின்பற்றிய மாணவர்கள் பலர்.அதிகம் ஏன்?அவரது நடு உச்சி தலைவாரும் பழக்கத்தைக் கூட வெஸ்லிக் கல்லூரி மாணவர்கள் கொண்டிருந்தார்கள் என்றால் பாருங்களேன்.
 
1918ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியான செல்வநாயகம் ஆசிரியராக இருந்த போதே சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1924ஆம் ஆண்டு சித்தியெய்தி சிவில் சட்டத்துறையைத் தேர்ந்தெடுத்து சட்ட வல்லுநரானார்.

அத்தொழிலில் தனது முழுக் கவ னத்தையும் செலுத்தினார். அப்போதெல்லாம் தமது வாழ்நாள் இலட்சியம் சுப்பிரிம் கோர்ட்டுக்கு நீதியரசராவதே என்று கூறுவது உண்டு.
 
எஸ்.ஜே.வி. புகழ்பெற்ற சட்டத்தரணியாக இருந்த காலத்தில் அன்னாரது ஜூனியராக இருந்து பிற்காலத்தில் பிரபல சட்டத் தரணிகளாகிய சிலரை இங்கு பார்ப்பது சாலச் சிறந்ததாகும்.
 
பிரதம நீதியரசர் பதவி வகித்த நெவில் சமரகோன், எஸ். சர்வானந்தா, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தை எட்மண்ட் விக்ரமசிங்க, வி. நவரட்ணராஜா, சி.இரங்கநாதன் என்போர்.
 
இவ்வாறு புகழ்பூத்த சட்டத்தரணியாக இருந்த செல்வா அரசியலில் நுழைந்தது அவரது போதாத காலமாக இருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி ஈழத்து தமிழினத்தின் தவப்பேறாகும்.
 
1944ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கொழும்பு சைவமங்கையர் கழக மண்டபத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் செல்வா கலந்து கொண்டார்.

தொடர்ந்து சோல்பரி கமிஷன் முன் ஜி.ஜி. சாட்சியமளித்த போது செல்வா அவர்கள் அருகிலிருந்து தம்மாலியன்ற பங்களிப்பை வழங்கினார்.
 
1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எஸ்.ஜே.வி.யின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்க் காங்கிரஸ் யாழ். குடாநாட்டில் ஏழு வேட்பாளர்களும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு வேட்பாளர்களுமாக மொத்தம் ஒன்பது வேட்பாளர்களை நிறுத்தியது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜி.ஜி.க்கு அடுத்தபடியாக எஸ்.ஜே.வி தான் பிரதம பேச்சாளர். தமக்கே உரித்தான மெல்லிய உடல்வாகுடன் மென்மையாக ஆறுதலாக ஆனால், உறுதியாக நிறுத்தி, நிறுத்தி அவர் பேசிய உரைகள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தன.
 
அந்தத் தேர்தலில் எஸ்.ஜே.வி. காங்கேசன்துறையில் போட்டி போட்டு வெற்றி பெற்றார். யாழ். குடாநாட்டில் ஆறு தொகுதிகளில் தமிழ் காங்கிரஸ் பெரு வெற்றியீட்டியது.

எஸ்.ஜே.வி.யின் ஜூனியராகக் கடமையாற்றிய கோப்பாய்க் கோமான் கு. வன்னியசிங்கம் கோப்பாய்த் தொகுதியில் பெரு வெற்றியீட்டினார்.
 
1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கைத் தமிழருக்கு ஒரு கரிநாள். அன்றுதான் இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்க் காங்கிரஸ், இலங்கை, இந்தியக் காங்கிரஸ், லங்கா சமசமாஜக் கட்சி, பொல்சுவிக் வெனிஸ்ட்ரீட்சி சில சுயேச்;சை உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

எனினும், சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து யூ.என்.பி. டி.எஸ்.சேன நாயக்கா அரசு தமிழரைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலீடுபட்டது.

அதன் முதற்படியாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மந்திரிப் பதவிகள் வழங்கப்பட்டன.
 
ஜி.ஜி.க்கு கைத்தொழில் அபிவிருத்தி, கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டது. ஜி.ஜி.யுடன் கே. கனகரத்தினம் (உதவி மந்திரிப் பதவி), சி.இராமலிங்கம், வி.குமாரசாமி போன்றோர் அரசுடன் இணைந்தனர். செல்வநாயகம், வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் அரசுடன் இணைய மறுத்துவிட்டனர்.
 
1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.ஜி. அமைச்சராகி அரசுடன் இணைந்தார். அன்றிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் ஜி.ஜி. குழு, செல்வநாயகம் குழு என இரண்டாகப் பிரிந்து தனித்த கூட்டங்களும் நடத்தத் தொடங்கினர்.

அக்காலகட்டத்தில் செனட்டராக இருந்த இ.எம்.வி. நாகநாதன், செல்வநாயகம் குழுவில் இணைந்து கொண்டார்.
 
தொடர்ந்து தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதும் தன்னிகரில்லாத் தலைவராக தந்தை எஸ்.ஜே.வி. விளங்கியதும், பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அன்னார் வெற்றி பெற்றதும் அனைவரும் அறிந்ததே.
 
பெரியவர் செல்வநாயகம் தமிழர் விடுதலைக்காக, தமிழ் மக்கள் அமைதியாக தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இறுதி வரை ஒரு சத்தியாக்கிரகியாக, ஊழலற்ற வாழ்க்கையைக் கடைப்பிடித்தார்.

அமரர் செல்வநாயகத்தின் தீர்க்கதரிசனமான பண்டா-செல்வா ஒப்பந்தத்தையோ அல்லது பண்டா-டட்லி ஒப்பந்தத்தையோ மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் நிறைவேற்றி இருந்தால் எத்தனை பொருள் இழப்புகள், உயிர்ச் சேதங்கள், அனர்த்தங்களை இந்த அழகிய, சிறிய நாடு தவிர்த்திருக்கும்.
 
அன்னார் தாம் காலமாகும் முன் தமது 79ஆவது வயதில் ‘கடவுள்தான் இனி தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்ற வேண்டும்”என்றார்.தந்தையின் கூற்று எத்தனை தீர்க்கதரிசனமான கூற்று! அக்கூற்று நிதர்சனமான கூற்றாக இன்று மாறியிருப்பது தமிழ் பேசும் மக்களின் துரதிர்ஷ்டமே!

பகிர்ந்துகொள்ள