தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்  கோரிக்கை.

You are currently viewing தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்  கோரிக்கை.

சிறிலங்கா வரலாறு காணாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் அதன் பொருளாதார நிலைமை மேலும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. 1948 இல் இலங்கைத் தீவு பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தைத் தன்னகப்படுத்திய தென்னிலங்கையின் சிங்கள சிறிலங்கா அரசுகள், இலங்கைத் தீவின் வட-கிழக்குப் பகுதியை தனது வரையறுக்கப்பட்ட வரலாற்று மற்றும் பாரம்பரிய தாயகமாகக் கொண்டு வாழும் இன்னொரு தேசிய இனமான ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பினைக் கட்டவிழ்த்து விட்டது.   தமிழர்களின் தேசக்கட்டமைப்பினை இல்லாதொழிக்கும் திட்டத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிறிலங்காவின் சிங்கள அரசாங்கங்கள், ஈழத் தமிழர்களின் மரபுவழித் தாயகம், பொருளாதாரம், தனித்துவமான பண்பாடு, வரலாறு, பாரம்பரியம், மொழி ஆகியவற்றைக் குறிவைத்து அழித்துவந்துள்ளன. அதுமட்டுமன்றி, ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புக்குத் தேவையான நிதியினை தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றிய அனைத்து சிங்கள அரசுகளும் தமது வரவு செலவுத் திட்டங்களினூடாக ஒதுக்கியதுடன், நாட்டின் அனைத்து வளங்களையும் இதற்காகச் செலவிட்டு வந்துள்ளன.   இன்றும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொள்கைகளாக, தமிழர் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பு, தமிழர் பகுதிகளை இராணுவமயமாக்கல், நில அபகரிப்புகள், தமிழர்களின் தேசக் கட்டமைப்பினையும் அதன் எல்லைகளையும் சிதைத்துப் பலவீனமாக்குதல், தமிழர்களின் மரபுவழியான, வரலாற்று ரீதியிலான  தாயக உரிமைகோரலை முடக்குதல் போன்றவையே இருந்து வருகின்றன. தமிழர்களை அழிப்பதற்கும், அவர்களது தேசியக் கட்டமைப்பை சிதைப்பதற்கும் சிறிலங்கா கடைப்பிடித்து வந்த கொள்கையே இன்று சிறிலங்காவின் இந்நிலைமைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது.  இன்று சிறிலங்கா ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. தனது குடிமக்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்திசெய்ய இயலாத நிலையை சிறிலங்கா இன்று எட்டியுள்ளது. மேலும், சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான அடக்குமுறை, ஆக்கிரமிப்பு, இன அழிப்புகள் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இத்தருணத்தில் அனைத்துத் தரப்பினரும் சிறிலங்கா ஒரு தோல்வியடைந்த நாடு என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.   இலங்கையில் யார் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாலும், தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடைவடிக்கைகள் தொடரும் என்பதே வரலாறு தொடர்ந்து புகட்டும் பாடம். முறையான ஆட்சியை வழங்க முடியாத சிறிலங்கா அரசின் கீழ் ஈழத் தமிழர்கள் இனியும் வாழ முடியாது. இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஈழத் தமிழர்களின் தாயகமான தமிழீழத்தின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கும்படியான தமிழர் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதனை நாம் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். 

இலங்கைத் தீவில் சுதந்திரமான தமிழீழ நாடும் சிறிலங்கா தேசமும் தனித்தனியே அமைவதே நிரந்தரமான தீர்வாக அமைய முடியும். இனிமேலும் ஈழத் தமிழர்கள் தலைவிதி கொழும்பில் நிர்ணயிக்கப்பட்டதாக இருக்காமல், அவர்கள் பாதையைத் தாமே வகுத்துக்கொள்ளவும், தங்கள் அரசியல் முடிவுகளைத் தாமே எடுக்கவும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இலங்கையின் முன்னேற்றமும் எதிர்காலமும் நீண்ட காலமாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு எட்டுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.  அதேவேளையில், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு சிங்கள மக்களையும், அவர்களின் பொது அமைப்புகளையும், கல்வியாளர்களையும், அரசியல் தலைவர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். கடந்த சில வாரங்களாக சிங்கள இளையோர்கள் நீதிக்காகவும் ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காகவும் குரல்கொடுப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  

 ஈழத்தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்காக அவர்கள் தொடர்ந்தும் குரல்கொடுப்பதுடன், தமது நேசக்கரத்தினையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குமாறு நாம் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வேளையில், ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் வரலாற்று மற்றும் மரபுவழி தாயகத்தில் உள்ள இறையாண்மையை அங்கீகரிக்குமாறு நாம் சர்வதேச சமூகத்திடமும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், சிறிலங்காவுக்கு எதிரான உடனடி சர்வதேச நடவடிக்கையை நாம் வலியுறுத்துவதுடன், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு மேற்கொண்டமை போன்றவற்றுக்காக சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசையும் அதன் ஆட்சியாளர்களையும் நீதி விசாரணையின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.  தமிழீழ நாட்டின் மீது சிறிலங்கா நாடு மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத் தமிழர்களின் இறையாண்மையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்து, இலங்கைத் தீவில் இறையாண்மை கொண்ட இரு தேசங்களின் அமைவே இலங்கைத் தீவின் சிக்கலுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

– தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் –

தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை வழங்கப்பட வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்  கோரிக்கை. 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments