தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

You are currently viewing தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நாகை அக்கரைப்பேட்டை மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். நாகையை அடுத்த அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் கவுதமன் (55). நாகை மாவட்ட திமுக பொறுப்பாளரான இவருக்குச் சொந்தமான விசைப்படகில், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த கலைச்செல்வன் (33), தீபன் ராஜ் (32), ஜீவா (32), மாறன் (55), அரசமணி (31), முருகானந்தம் (35), மோகன் (40), ராமச்சந்திரன் (47), ஆனந்த் (30) ஆகியோர், கடந்த மாதம் 28-ம் தேதி அதிகாலை, கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தூரத்தில், அவர்கள் மீன் பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அக்கரைப்பேட்டை மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, படகில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், கலைச்செல்வனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அதன் பின்பு, இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றதையடுத்து, காயமடைந்த மீனவர் கலைச்செல்வனை சக மீனவர்கள், கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்து, அங்கிருந்து நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை கொண்டு சென்றனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெறுகிறார்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்து வந்து, கலைச்செல்வனை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும், இதுகுறித்து நாகை கடலோர காவல் நிலைய போலீஸாரும், மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது மீனவ கிராம மக்களிடையே கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments