தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும்போதுதான் இந்தத் தீவு அழிவிலிருந்து மீண்டெழும் – செ.கஜேந்திரன் எம்பி!

You are currently viewing தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும்போதுதான் இந்தத் தீவு அழிவிலிருந்து மீண்டெழும் – செ.கஜேந்திரன் எம்பி!

தமிழித் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் முழுவிபரம் வருமாறு.

தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும்போதுதான் இந்தத் தீவு அழிவிலிருந்து மீண்டெழும் – செ.கஜேந்திரன் எம்பிஅவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!

இன்றைய தினம் இந்த நாட்டினுடைய 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினுடைய இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நாங்கள் கலந்துகொண்டுள்ளோம். நாட்டினுடைய வருமானம் பாதாளத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் அந்நிய செலாவணி கையிருப்பும் தீர்ந்துள்ள கையறு நிலையில் நின்றவாறு இந்த வரவுசெலவு திட்டத்தை இந்த அரசு சமர்ப்பித்துள்ளது. 
நாடு பிளவுபடுதலை தடுத்தல் என்ற போர்வையில் ஒற்றை அடசியை பாதுகாக்கிறோம் என்ற கோசத்தோடு தமிழ்த் தேசத்தின் மீது நீங்கள் இன அழிப்பை மேற்கொண்டு போரை வென்றுவிட்டதாகவும் ஒற்றையாட்சியை பாதுகாத்து விட்டதாகவும் எகத்தாளம் இட்டு பிரகடனம் செய்து 12 ஆண்டுகளின் பின்னர் இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளீர்கள். ஆனாலும் இன்று நாட்டினுடைய நிலைமை என்ன ? நாடு கடனில் மூழ்கி உள்ளத்துடன் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல ஒட்டு மொத்த மக்களும் பட்டினிச்சாவை எதிர்நோக்கி உள்ள நிலையிலே, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கிடக்கின்றது. 
இதில் தமிழ்த் தேசத்தின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 2009இல் இனவழிப்பு  மூலம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் 13 வரவு-செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தமிழ் தேசத்தை முற்றாக புறக்கணித்தே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அவற்றைப் போன்றுதான் தமிழ் தேசத்தை முற்றாகப் புறக்கணிக்கணித்தேதான் இந்த வாவுசெலவுத்திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்ல, இந்த வரவு-செலவு திட்டங்களூடாக அரசதிணைக்களங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அந்த அரசதிணைக்களங்களுடாக தமிழர் தேசத்தின் மீது ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சினுடைய முப்படைகள்,  பொதுமக்கள் பாதுகாப்புத்துறை மற்றும் பௌத்த கலாச்சார திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, எல்லைநிர்ணயசபை, வனஜீவராசிகள் திணைக்களம், வனபாதுகாப்பு திணைக்களம், தொல்பொருள்; திணைக்களம், மீன்பிடி அமைச்சு, துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை, வெளிநாட்டு அமைச்சு, வர்த்தக அமைச்சு போன்றவற்றை நான் உதாரணமாக குறிப்பிடுகின்றேன். துறைமுக அபிவிருத்தி அமைச்சினூடாக வடக்கிலே மயிலிட்டித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு அது தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டு இன்று முழுமையாக சிங்கள மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஒரு உதாரணமாக குறிப்பிடுகின்றேன். 
மேற்படி துறைகள் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள்,  சித்திரவதைகள், தடுத்துவைப்புகள் மற்றும் நீண்டகாலமாக அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்க நீதி இல்லை, முன்னாள் போராளிகள் மீதான ஒடுக்குமுறைகள், சிங்கள குடியேற்றங்கள் பௌத்தமயமாக்கல்கள், மற்றும் மீன்பிடித்துறை முற்றாக ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுவதுடன் உங்களது கொள்கையினால் விவசாயத்துறையும் வர்த்தகத்;துறையும் அழிக்கப்படுகிறது. .
ஒட்டுமொத்தமாக தமிழ் தேசத்தின் நிலமையை கடந்த யுத்த காலத்தில் இருந்ததை விட மோசமான ஒரு இடத்துக்கு கொண்டு செல்கின்றது. உங்களுடைய வரவு-செலவுத்திட்டங்களும் அரசாங்கத்தினுடைய கொள்கைகளும் எங்களுடைய தேசத்தை முழுமையாக சிங்கள பௌத்த மயமாகின்ற நோக்கத்தோடுதான் உங்களுடைய நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்தக் காரணத்தினாலே கடந்த காலங்களை போன்றே  இந்த வருடமும் நாங்கள் இந்த வரவுசெலவு திட்டத்தை  ஆதரிக்க முடியாதது மட்டுமல்ல எதிர்த்தே ஆகவேண்டும் என்கிற நிலமைக்கு வந்து நிக்கின்றோம். 
இது ஒரு புறமிருக்க கடந்த 48ம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு சமஸ்டி வழங்கினால் அதிகாரங்கள் வழங்கினால் நாடு பிரிந்துவிடுமென்று கூறி இனவாதமாக செயல்பட ஆரம்பித்திருந்தீர்கள். குடித்தொகை பரம்பலை மாற்றி அமைத்தல், குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், பௌத்தமயமாக்கல், சிங்கள மயமாக்கல், கல்வித்தரப்படுத்தல் தெற்கிலிருந்து வன்முறை மூலமாக தமிழர்களை வடக்கிற்கு கப்பலேற்றி அனுப்புதல் போன்ற செயல்ப்பாடுகளை மேற்கொண்டு வந்தீர்கள். தமிழர்கள் நாட்டை பிரிக்கப்போகிறார்கள் எனக்கூறி  6 ஆம் திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தீர்கள். பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டுவந்தீர்கள். ஆனாலும் தமிழர்கள் தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அரசியல் உரிமைக்காக்கவும் ஆயுதமேந்தி போராடும் நிலைமையை உங்களால் தடுக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் அப்போராட்டத்தை உங்களால் அழிக்கவும் முடியவில்லை. ஏனெனில் அது அரசியல் உரிமைக்கான நீதிக்கான நியாயமான போராட்டம். இறுதியில் இன  அழிப்பு ஒன்றினூடாகத்தான் உங்களால் அந்த உரிமைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக் கூடியதாக இருந்தது. அவ்வாறு இன  அழிப்பை அரங்கேற்றியபோது இனிமேல் இத்தீவானது தூய  சிங்கள பௌத்த தீவாக மாறும், மாற்றப்படுமென்று சிங்கள மக்களை கனவுகாண வைத்தீர்கள். அனால் இன்றைய நிலை என்ன என்பதை நீங்கள் சிந்தித்து பாருங்கள். இன்று நாடு பாரிய கடனில் மூழ்கியிருப்பது மட்டுமல்லாமல் சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இந்த நாடு விற்கப்பட்டு இந்த நாடு சிங்கள மக்களுக்கே சொந்தமாக இருக்குமா என்ற கேள்வியை கேக்கின்ற அளவுக்கு நிலைமை மோசமைடைந்துள்ளது, நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மனிதனுக்கு அடிப்படைத் தேவையாக உணவு உடை உறையுள் என்று சொல்லுவார்கள். உங்களால் உடைகளையும் உறையுளையும் வழங்க முடியாதது மட்டுமல்ல உணவைக் கூட வழங்க முடியாத நிலைமைக்கு இந்த நாடு இன்று வந்திருக்கின்றது. 
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்வதிலும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதிலும் நீங்கள் முழுமையாக தோல்வி அடைந்துள்ளீர்கள். கடந்த    30 ஆண்டுகால யுத்தத்தில் உங்களது நயவஞ்சகத்தால் தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம் மக்களை திருப்பி பயன்படுத்தியிருந்தீர்கள். ஆனால் இன்று அந்த முஸ்லீம் சகோதரர்களையும் ஒட்டுமொத்தமாக ஒரு இனமாக குறிவைத்துள்ளீர்கள். 
சமஸ்டி கொடுத்தல் நாடு பிளவு பட்டுவிடுமென்ற எண்ணத்திலிருந்து நீங்கள் விடுபடுங்கள். சமஸ்டி கொடுத்தால் அதிகாரங்களை கொடுத்தால் நாடு பிளவுபட்டுவிடும் என்ற பொய்களை சிங்கள மக்களுக்கு கூறி அவர்களை ஏமாற்றி உங்களோடு வைத்துக்கொண்டு அரச அதிகாரங்களை பயன்படுத்தி நிர்வாக ரீதியாகவும் கலாச்சார பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்குமுறைகளை மட்டும் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டீர்கள். இந்த அனைத்தும் நாட்டை ஐக்கியப்படுத்தவில்லை. மேலும் பிளவுபடுத்தி சமூகங்களை துருவப்படுத்தியுள்ளது என்பதை இந்த இடத்திலே பதிவுசெய்துகொள்ள விரும்புகின்றேன். 
இந்த நாட்டில் ஆரம்பகாலத்திலிருந்து ஆட்சிப்பீடம் ஏறியவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்து மக்களுக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தி இந்த  நாட்டு மக்களுடைய செல்வாக்கை பெற்று ஆட்சிப்பீடம் ஏறுவதற்குப்பதிலாக அவர்கள் கையாண்ட அணுகுமுறை தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை கக்கி கிராமங்களை அழித்து தமிழ் மக்களை கொன்று பாலியல்வல்லுறவுக்குட்படுத்தி சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு பௌத்தமயமாக்கி தனிச்சிங்கள சட்டம் கல்வித்தரப்படுத்தல் மற்றும் கலவரங்கள் போன்றவற்றினூடாக சிங்களமக்களினுடைய ஆதரவை திரட்டி  தம்மைத்  தேச பக்தர்களாக காட்டி ஆட்சிப் பீடம் ஏறி வந்தார்கள். 
2009 இலே நீங்கள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவந்த பிற்பாடு  இன்று உங்களிடம் மிஞ்சி இருப்பது என்ன? இன்று இந்த நாடு முழுமையாக அந்நிய சக்திகளுடைய பூகோள போட்டிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றதென்பதை இப்பொழுதாவது நீங்கள் விளங்கிக்கொள்கிறீர்களா. ஆகவே உங்கள் அணுகுமுறை முற்றாக தோல்வி அடைந்துள்ளது. 
ஒற்றை ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது . நீங்கள் இந்த ஒற்றையாட்ச்சியை பாதுகாப்பதற்காக 70 ஆண்டுகளாக நீங்கள் மேற்கொண்ட அணுகுமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து இருக்கின்றான. 13ம் திருத்தச்சட்டமோ ஒற்றையாட்ச்சியோ ஒருபோதும் தீர்வாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.  எங்களது உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் . 
ஆகவே உங்களது அணுகுமுறையை மாற்றுங்கள். தமிழர் தேசத்தையும் தமிழ் தேசத்தினுடைய இறைமையையும் சுயநிர்ணயஉரிமையையும் அங்கீகரிக்கின்ற ஒரு சமஸ்டி தீர்வை புதிய அரசியலமைப்பினூடாக கொண்டுவருவதனைப் பற்றி சிந்தியுங்கள். அதன் மூலமாக இலங்கைத்தீவில் தமிழ் தேசமும் சிங்கள தேசமும் ஐக்கியமாக வாழக்கூடிய சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஆனந்தமாக கூடி வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குங்கள். இதை எங்களுடைய தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 2001ம் ஆண்டு மாவீரர் உரையிலே சொல்லியிருக்கின்றார்.
ஆகவே இந்த தீவை மையப்படுத்தி நடக்கின்ற பூகோள போட்டியிலே நீங்கள் சிக்குண்டு இந்த நாடு இந்த சக்திகளினுடைய போட்டி காரணமாக பிளவுண்டு போவதை நோக்கித்தான் உங்களுடைய நகர்வுகள் நடந்துகொண்டிருக்கிறது. ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள். சிங்கக்கொடியிலே சிங்கத்தை வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக நீங்கள் சிங்கங்களுமல்ல. சிங்கத்தினுடைய தலையுமல்ல. இந்த பிராந்திய  பூகோள ஆதிக்கப்போட்டியிலே நீங்கள் சிங்கத்தினுடைய வாலில் இருக்கின்ற உரோமம் தான் என்பதனை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். 
இந்த அரசாங்கம் வியத்கம என்ற பெயரிலே பலபுத்தி ஜீவிகளை தன்னோடு இணைத்துக் கொண்டுள்ளது. அவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன். நீங்கள் வீடு கொளுத்தும் இராசாவுக்கு நெருப்பெருத்துக் கொடுக்கும் மந்திரிகளாக இருக்காதீர்கள். 
தயவு செய்து வித்தியாசமாக சிந்தியுங்கள். நீங்க இந்த ஒற்றையாட்சியை கைவிட்டு எப்பொழுது தமிழ் தேசத்தை அங்கீகரித்து  தமிழ் மக்களை அரவணைப்பதற்கு முஸ்லீம் மக்களை   அரவணைப்பதற்கு தயாராகிறீர்களோ அப்பொழுதுதான் இந்த தீவு அழிவிலிருந்து மீண்டெழ முடியும் என்பதை ஆணித்தனமாக பதிவுசெய்து விடைபெறுகின்றேன்.

நன்றி

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments