தமிழ்த் தேசத்திற்கு உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.12.2006அன்று இழந்துவிட்டது…

You are currently viewing தமிழ்த் தேசத்திற்கு உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.12.2006அன்று இழந்துவிட்டது…

தமிழ்த் தேசத்திற்கு உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.12.2006அன்று இழந்துவிட்டது... 1

​“தமிழருக்கு நிரந்தர தமிழீழ தாயகம் விரைவிலே மலரும்” எனவும் “மறுபிறப்பொன்றென்று இருக்குமானால் மீண்டுமொரு தமிழனாக தமிழீழத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்” எனவும் எமது தேசத்தின் விடுதலை மீதும், தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு கனடா நாட்டின் கியூபெக்,மொன்றியல் நகரில் 22.12.2006 அன்று 97வது வயதில் காலமான நாட்டுப்பற்றாளர் வி. நவரத்தினம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.​


வி.நவரத்தினம் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்”  கெளரவம் 

தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.12.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி. நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார்.

சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். தனது மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், படைப்பாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து தேசப் பணிபுரிந்தார்.

ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தனது இனத்தின் விடியலிற்காக தனது பால்ய வயதிலேயே வெகுண்டு எழுந்தவர் இவர். தமிழர் தேசிய எழுச்சியின் ஆரம்ப வடிவமான தமிழரசுக் கட்சி அமைப்பின் மூத்த, ஆரம்ப கர்த்தாவாகவும் பின்னர் அதன் மேன்மைக்காக கடினமாக உழைத்தவருமாவார். மிருகத்தனமாக அடக்குமுறைக்குள்ளாகும் இனமொன்று தனியே அரசியல் வழியில் ஒப்பந்தங்கள், உடன்பாடுகளினூடாக விடுதலையை வென்றெடுக்க முயல்வதின் அபத்தத்தினை அதன் ஆரம்பத்திலேயே தமிழர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியரின் வெளியேற்றத்தின் பின்னர் சிங்களத் தலைமைகளுடனான தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பேச்சுக்களிலும் இவர் பங்குபற்றினார். அரசியல் ஆதாயத்திற்காகப் புனிதமான தனது இலட்சியத்தையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் விட்டுக்கொடுக்காத தேசாபிமானியாகத் திகழ்ந்தார். இத்தகைய தனது குறுகிய கால சிங்களத் தலைமைகளுடனான சந்திப்பனுபவங்களினூடாக அரசியல் வழித்தீர்வின் நிச்சயமின்மையை இவர் உணர்ந்து புதிய பாதையினை தனக்கென வகுத்துக்கொண்டார்.

1969 இலேயே ‘தனித் தமிழ் நாட்டின்;’ அவசியம் பற்றி எடுத்தியம்பினார். அதற்காகப் போராட வருமாறும், எந்த வழியிலேனும் போராடுமாறும் தமிழ் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். தீர்க்கதரிசனமான பார்வையும், சிந்தனையும் மிக்கவரான இவர் தனது நடைமுறை வாழ்க்கை வரலாற்றை, தான் நேரில் கண்டவற்றை, கேட்டவற்றை தமிழ் இளைய தலைமுறைக்கு மட்டுமல்லாது சர்வதேச சமூகத்திற்கும் புரியத்தக்க வழியில் நூலாக்கம் செய்யும் அருந்தொண்டாற்றினார்.

காலத்தால் அழிந்து போகாத, இன விடுதலையை மேன்மைப்படுத்துகின்ற, சமூக அக்கறை மிகுந்த அரிய நூல்கள் பல இவரால் படைக்கப்பட்டிருக்கின்றன. கால வயோதிபத்தினால் இவரது உடல் தளர்ந்து போயிருந்தாலும் உள்ளத்தில் சுதந்திர உணர்வு நிரம்ப இளமை மிடுக்குடன் மிளிர்ந்த இவர் இறுதிவரை தமிழ் மண்ணிலும், மக்களிலும் பற்று மிகுதியுடன் வாழ்ந்தார். நேற்று வரை தமிழ் தேசியத் தலைமைத்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு எழுதினார்; பேசினார்; வாழ்ந்தார்.

“தமிழருக்கு நிரந்தர தமிழீழ தாயகம் விரைவிலே மலரும்” எனவும் “மறுபிறப்பொன்றென்று இருக்குமானால் மீண்டுமொரு தமிழனாக தமிழீழத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்” எனவும் மேல் நாடொன்றிலிருந்து கடைசி வரை உரைத்த அவரது தேசபக்திக்கு சிரம் தாழ்த்துகின்றோம்.

இப்படியாக எமது தேசத்தின் விடுதலை மீதும், எமது இனத்தின் சுதந்திரப் பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் எமது தேசியத் தலைவர் மீதும் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு வந்த வி. நவரத்தினம் அவர்களுக்கு எமது விடுதலை அமைப்பு நாட்டுப்பற்றாளர் எனும் கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கின்றது.

தமிழ்த் தேசத்திற்கு உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.12.2006அன்று இழந்துவிட்டது... 2
பகிர்ந்துகொள்ள