தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நமது அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும்!

You are currently viewing தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நமது அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும்!

இராணுவத்தை மீறி வடக்கில் எதனையும் செய்ய முடியாது என்பதை சட்டதரணி குருபரனின் விடயம் உறுதிப்படுத்தியுள்ளதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

இலங்கையில் ஜனநாயகம் நிலவுவதாக சுமந்திரனும் சம்பந்தனும் சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்நாடு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இராணுவமயமாக்கத்திற்குள் சென்று பல ஆண்டுகள் கடந்துவிட்டன. குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவத்தை மீறி கல்வி, நிர்வாகம், அபிவிருத்தி என எதனையும் செய்யமுடியாத நிலைதான் நீடிக்கிறது. அதன் மொத்த விளைவைத்தான் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி குமாரவடிவேல் குருபரன் விடயத்தில் நடந்தது.

சட்டத்தரணி குருபரன் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற முடியும், ஆனால் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தமிழருக்காக வாதாட முடியாது. இது நீதி நியாயத்திற்கு எதிரானது. பேராசிரியர் பீரிஸ் சட்டப் பள்ளியில் கற்பித்தபோது, ​​அவர் நீதிமன்றத்தில் பல வழக்குகளில் ஆஜராகி இருந்ததை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தால் திருத்தப்பட்ட அல்லது புதிதாக உள்ளடக்கப்பட புதிய சட்டங்கள் தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மட்டுமே நன்றாக தெரியும். அது மட்டுமல்ல உலகின் பிற பகுதிகளில் , நீதி மன்றத்தில் ஒரு முக்கியமான சட்ட வாதத்தை விவாதிக்க வேண்டியிருக்கும் போது, ​​அவர்கள் சட்ட பேராசிரியர்களைதான் அழைத்து வருகிறார்கள்.மேலும் புதிய சட்டத்தை எவ்வாறு விளக்குவது என்பது பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு தான் தெரியும்.

உதாரணமாக, கடந்த ஜனவரியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் ற்கு எதிரான குற்றச்சாட்டில் .
பல சட்ட பேராசிரியர்கள் செனட்டில் அமைந்த நீதி மன்றத்தில் வாதாடினார்கள் . அதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேக்க நாகரிகம், எகிப்திய நாகரிகம் மற்றும் நமது தமிழ் சிந்து வெளி பள்ளத்தாக்கு,நாகரிகங்கள் அனைத்திலும், பெரும்பாலான பங்கேற்பாளர்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினரே. இந்த நீதி மன்றத்திலிருந்து சட்ட பேராசிரியரை நீக்கிவிட்டால், இலங்கையானது நாகரிகத்திலிருந்து விலகிச் செல்லுகிறது என்பது பொருள்.

இதற்கு காரணமாக இருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நமது அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும்.நமது இறுதி இலக்காக இலங்கையின் மீறல்கள் மற்றும் நீதி அமைப்பில் தமிழருக்கான பாகுபாடு போன்ற விடயங்ககளை தீர்ப்பதற்காக அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை நம் அழைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து செயற்படவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்று வழக்கில் சுமந்திரன் ஆயராகியிருந்தார். அந்த வழக்கில் ஆயராவதற்கு சுமந்திரனுக்கு எந்த தகுதியும் இல்லை. பாராளுமன்றில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட சுமந்திரன் எப்படி இந்துகோவில் வழக்குகளில் ஆயாராகமுடியும். அது தமிழர்களிற்கு எதிரான சதியே. எனவே படித்த விலை போகாத தலைமைகளை நாம் முன்கொண்டுவரவேண்டும். அதற்கான மக்கள் ஆதரவு தற்போது வந்துள்ளது. அந்த மாற்றம் தான் தமிழர்களிற்கான தீர்வாக அமையும் என்று கூறிக்கொள்கின்றோம் என்றனர்.

பகிர்ந்துகொள்ள