தம்பி பேரறிவாளனுக்குப் பிணை: கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தின் முக்கிய மைல் கல்! – சீமான் வரவேற்பு!

You are currently viewing தம்பி பேரறிவாளனுக்குப் பிணை: கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தின் முக்கிய மைல் கல்! – சீமான் வரவேற்பு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். நீதியரசர் நாகேஷ்வர்ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள முதன்மைத்துவம் வாய்ந்த இம்முடிவை வரவேற்கிறேன்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கினை முன்னின்று நடத்திய மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய கோபால் சங்கரநாராயணன் அவர்களுக்கும், எனது அன்புத் தம்பிகள் வழக்கறிஞர்கள் பாரிவேந்தன், பிரபு இராமசுப்பிரமணியன் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வழக்கின் விசாரணை வளையம் முழுமையாக விரிவடையாத நிலையில், நேர்மையாக விசாரணை இதுவரை நடத்தப்படாதச்சூழலில், செய்யாதக் குற்றத்திற்காக முப்பது ஆண்டுகாலத்தைச் சிறைக்கொட்டடிக்குள்ளேயே கழித்த தம்பி பேரறிவாளனுக்குத் தற்போது பிணை கிடைத்திருப்பது பெரும் ஆறுதலைத் தருகிறது. கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடந்தேறியச் சட்டப்போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு மிக முக்கியமானதொரு மைல் கல்லாகும்.

தற்போது கிடைக்கப்பெற்றிருக்கிற பிணை எனும் தற்காலிகத்தீர்விலிருந்து விடுதலை என்பதனை நோக்கி நகர்த்திச்செல்வதே முழுமையான மகிழ்ச்சியைத் தரும் நல்லறிவிப்பாகும். அதனை சாத்தியப்படுத்த தம்பி பேரறிவாளனுக்கு முழுமையாகத் துணைநிற்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments