தயார் நிலையில் ரஷ்ய அணுவாயுதப்பிரிவு! அணுவாயுதப்போருக்கான ஆயத்தமா…?

You are currently viewing தயார் நிலையில் ரஷ்ய அணுவாயுதப்பிரிவு! அணுவாயுதப்போருக்கான ஆயத்தமா…?

27.02.2022. உலகை கிலிகொள்ள வைத்த நாள். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது படைகளின் அணுவாயுதப்பிரிவினரை எதற்கும் தயாராக இருக்கும்படி கட்டளையிட்ட நாள்.

அதிபர் புதினின் இந்த கட்டளையின் பின்னணியில் நடக்கக்கூடியவை எவை… விளக்குகிறார், நோர்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் அரச அறிவியல்துறை நிபுணர் “Kristin Ven Bruusgaard”!

உக்ரைமீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்ததை தொடர்ந்து, மேற்குலகம் ரஷ்யாவுடனான உறவுகளை முறித்துக்கொண்டதோடு, பொருளாதாரத்தடைகளையும் விதித்தன. சீற்றமடைந்த அதிபர் புதின், தனது இராணுவத்தின் அணுவாயுதப்பிரிவின் தளபதிக்கு விடுத்த விசேட உத்தரவின்படி, ரஷ்ய அணுவாயுத்தப்பிரிவு எதற்கும் தயாரான போர்க்கால சூழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் அயல் நாடான “பெலாரஸ்”, ரஷ்யாவுக்கு உறுதுணையாக நிற்பதற்காக, தனது ஆளுமைக்குட்பட்ட நிலப்பரப்பில் ரஷ்யா தனது அணுவாயுதங்களை நிலைநிறுத்திக்கொள்ளலாம் என, தனது சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்ததையடுத்து, நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளான “போலந்து”, “லிதுவேனியா”, “லத்வியா” ஆகிய நாடுகளை குறிவைத்து தனது அணுவாயுதங்களை “பெலாரஸ்” நாட்டில் நிலைநிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் ரஷ்ய அணுவாயுதப்பிரிவு! அணுவாயுதப்போருக்கான ஆயத்தமா...? 1

இவற்றுக்கும் அப்பால், அமெரிக்க, மற்றும் நேட்டோ நாடுகளை குறிவைக்கும் அதிபர் புதின், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையே அதிகம் பாவிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடும் அறிவியல் நிபுணர் “Kristin Ven Bruusgaard”, அணுவாயுதம் வைத்திருக்கக்கூடிய ஏனைய நாடுகளை விடவும், ரஷ்யா பெருந்தொகையில் அணுவாயுதங்களை பலப்படுத்தியிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாதெனவும் எச்சரிக்கிறார்.

ரஷ்யாவை பற்றி, ஆத்திரமூட்டும் வகையிலான கருத்துக்களை நேட்டோ நாடுகள் முன்வைத்து வருகின்றன என அதிபர் புதினும், மேற்குலகம் தனது எல்லைபகுதியில் அத்துமீறி நடந்துகொண்டால், அணுவாயுதத்தை பிரயோகிக்கும்படி அதிபர் புதினிடம் தான் கோரா வேண்டிவருமென “பெலாரஸ்” அதிபரும் தெரிவித்திருப்பது, மேற்குலகத்தை சற்றே நிலைகுலைய வைத்திருக்கிறது. அணுவாயுதம் தொடர்பான ரஷ்ய அதிபரின் நகர்வுகள், அணுவாயுதப்போர் ஒன்றை தொடங்கும் நகர்வாக இப்போதைக்கு பார்க்க முடியாது என்றாலும், மேற்குலகத்துக்கு மிகக்கடுமையான எச்சரிக்கையை விடும் அதிபர் புதினின் செயற்பாடாகவே இதை பார்க்க முடியும் என்கிறார் அறிவியல் நிபுணர் “Kristin Ven Bruusgaard”.

தனது அணுவாயுத்தப்பிரிவுக்கு, தயார்நிலையில் இருக்கும்படி அதிபர் புதின் கட்டளையிடுவதென்பதன் பின்னணியில் கீழ்வரும் நடைமுறைகள் அடங்கியுள்ளன:

  1. ரஷ்யாவின் நிலப்பரப்பில் வைக்கப்பட்டிருக்கும் அணுவாயுதங்கள் இயங்கு நிலைக்கு தயார் செய்யப்படுதல்!
  2. விமானங்கள் மூலம் காவிச்செல்லப்படக்கூடிய அணுவாயுதங்கள், குறித்த விமானங்களில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படுதல்!
  3. அணுவாயுதங்களை கொண்டுள்ள நீர்மூழ்கிக்கப்பல்கள் தயார் நிலைக்கு கொண்டுவரப்படுதல்!

“மூலோபாய நெடுந்தூர அணுவாயுதங்கள்” மற்றும் “தந்திரோபாய குறுந்தூர அணுவாயுதங்கள்” என இரண்டாக பிரிக்கக்கூடிய அணுவாயுதங்களில் அமெரிக்கா அதிகளவிலான மூலோபாய நெடுந்தூர அணுவாயுதங்களையும், ரஷ்யா அதிகளவான தந்திரோபாய குறுந்தூர அணுவாயுதங்களையும் வைத்திருக்கின்றன. எனினும், அமெரிக்காவை விட 2000 அதிகமான அணுவாயுதங்களை, அதாவது, அமெரிக்காவின் மொத்த அணுவாயுதங்களை விடவும் சுமார் 10 மடங்கு அதிகமான அணுவாயுதங்களை கொண்டுள்ளது ரஷ்யா.

  1. மூலோபாய நெடுந்தூர அணுவாயுதங்கள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியவை என்பதோடு, குறுந்தூர அணுவாயுதங்களை விடவும் அபரிமிதமான சேதங்களை ஏற்படுத்தக்கூடியவை. அமெரிக்காவும், ரஷ்யாவும் இவ்வகையான அணுவாயுதங்களை பாவிக்குமானால் பூமியின் பெருமளவிலான பாகங்கள் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது. அணுவாயுதத்தை பாவித்த உலகின் முதலும் கடைசியுமான நாடாக இன்றுவரை அமெரிக்காவே உள்ளது.
  2. தந்திரோபாய குறுந்தூர அணுவாயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியவை அல்ல என்றாலும், மூலோபாய நெடுந்தூர அணுவாயுதங்களை விடவும் அதிகமான சேதங்களை ஏற்படுத்த வல்லவை.இவ்வகையான அணுவாயுதங்கள் தரையிலிருந்தும், வாகனங்களிலிருந்தும், விமானங்களிலிருந்தும் ஏவக்கூடியவை.
தயார் நிலையில் ரஷ்ய அணுவாயுதப்பிரிவு! அணுவாயுதப்போருக்கான ஆயத்தமா...? 2

சர்வதேச அணுவாயுத விதந்துரைகளின்படி, மூலோபாய நெடுந்தூர அணுவாயுதங்களை நாடுகள் வைத்திருப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என்றாலும், தந்திரோபாய குறுந்தூர அணுவாயுதங்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது. அமெரிக்காவை விடவும் ரஷ்யாவிடம் அதிகளவிலான தந்திரோபாய குறுந்தூர அணுவாயுதங்கள் இருப்பதற்கு இதுவே பிரதான காரணமாக அமைகிறது.

தற்போது உக்ரைன் விடயத்தில் அணுவாயுதமொன்றை ரஷ்யா இயக்குவதற்கான சந்தர்ப்பங்கள் மிகமிகக்குறைவு என கருத்துரைக்கும் நோர்வேயின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான “Adelina Trolle Andersen”, நிலைமைகள் கைமீறிப்போய் ரஷ்யா அணுவாயுதத்தை பாவிக்குமானால், பெரும்பாலும் தந்திரோபாய குறுந்தூர அணுவாயுத்தத்ததையே ரஷ்யா பாவிக்கும் என தெரிவிக்கிறார். தந்திரோபாய குறுந்தூர அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டால், அதன் தன்மை, அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வெடிபொருள் அளவு, அது வெடிக்க வைக்கப்படும் இடத்தில் காற்று வீசும் தன்மை, அது வெடிக்கும் உயரம் போன்றவையே அழிவின் தன்மையை நிர்ணயிக்கும் என விளக்கும் ஆய்வாளர் “Adelina Trolle Andersen”, குறைந்த பட்சம் பெருநகரமொன்றை அழித்தொழிக்கும் விதத்தில் அழிவுகள் இருக்குமெனவும் கூறுகிறார்.

கருங்கடல் பகுதியில் அணுவாயுதங்களை தாங்கிய ரஷ்யாவின் நீர்மூழ்கிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையிலும், இடத்துக்கிடம் கொண்டு செல்லப்படக்கூடிய வகையிலான அணுவாயுதங்களை தாங்கியிருக்கும் காவிகள் ஆங்காங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையிலும், அணுவாயுதங்களை தாங்கியுள்ள விமானங்கள் எதற்கும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அணுவாயுதப்போரொன்றை நேட்டோ நாடுகள்மீது ரஷ்யா தொடுக்காதென்றே நம்பப்படுகிறது.

தயார் நிலையில் ரஷ்ய அணுவாயுதப்பிரிவு! அணுவாயுதப்போருக்கான ஆயத்தமா...? 3

நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் சிலவற்றில் அமெரிக்காவின் மூலோபாய நெடுந்தூர அணுவாயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், நேட்டோ நாடுகளில் ஏதாவதொரு நாட்டின்மீது, குறிப்பாக தனது எல்லையோரமாக இருக்கும் போலந்து, லத்வியா, லிதுவேனியா போன்றவற்றின்மீது அணுவாயுதத்தை ரஷ்யா ஏவினாலும், நேட்டோ சர்வதேச ரீதியிலான கண்டனத்தோடு மட்டும் நிலைமையை வைத்திருக்குமே ஒழிய, ரஷ்யாவோடு அணுவாயுத போறொன்றில் இறங்காது என்பதே யதார்த்தம் எனச்சொல்லும் ஆய்வாளர் “Adelina Trolle Andersen”, அணுவாயுத பாவனை என்பது நேட்டோ நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகத்துக்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவுக்கும் கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நேட்டோவும், ரஷ்யாவும் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளன எனவும் நிறைவு செய்கிறார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments