துரோகம் தொடர்கிறது…

You are currently viewing துரோகம் தொடர்கிறது…

சத்தியத்தை எழுதுகிறோமென
சத்தியெடுக்கும்
சத்தியவான்கள்
புத்தி பிழைத்துப்போய்
புசத்துகிறார்!

ஓடும் நதிகளென
ஓநாய்கள் உளறியபடியே
முள்ளம் தண்டில்லா
முறிந்த மரங்களின்
இடுக்குகளில் சிக்கி
சித்தம் சிதைந்து
சீழ் பிடித்து மணக்கிறது!

ஆடும் கால்கள்
ஓயும் வரையும்
கவரி மான்களாய்
செவிகளை உயர்த்தியவன்
பாக்களால் பாமாலை சூட்டி
நாக்களால் புகழ்ராகம் பாடி
நானிலமும் உணர்வுகளை பாச்சினான்!
இன்று
தேள்களாய் புனிதர்களின்
தியாகத்தில் கொட்டுகிறான்!

தேக்கு மர உறுதிபோல்
வாக்குரைத்து வரலாற்றில்
வாக்குமாறி போனவனும்
நாக்கிழுத்து ஓடிவந்து
காக்கும் கடவுளாய் நின்றவரை
வழிபடாதேயென வகுப்பெடுக்கும்
காக்கை வன்னியரின்
கால் பிடித்துக் கிடக்கும்
ஊன்று தடிகளுமாய்
கோளையிடும் சத்தம்
ஒருபோதும் நேர்கொண்ட
பார்வைக்கு ஈடாகாது!

காலத்துக்கு காலம்
நிறங்களை மாற்றும்
பஞ்சோந்திகளின்
தேய்ந்து போன தந்துவங்கள்
காய்ந்து போன கருவாடாய்
காற்றோடு மணத்தாலும்
மூக்கை மூடித்தான் கடக்கவேண்டியுள்ளது!

வீரத்தின் விளைநிலங்களை
துரோகத்தின் துண்களும்
சோரத்தின் கண்களும்
தோற்கடிக்க முடியாது!

துரோகமும் சோரமும்
சேறும் சகதியுமாய்
குமுகத்தில் புரையோடிக்
கிடக்கிறது!

வெட்கம் மானம் இறந்து
புறந்தள்ளும் நஞ்சுகளை
பீச்சியபடி
ஈசல்களின் இறக்கைகளை
பிடித்தபடி
தனக்குத்தானே குழி
பறிக்கிறது

துரோகம்!!!!

✍️தூயவன்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments