தேர்தல் குறித்து 23ஆம் திகதி இறுதி முடிவு!

You are currently viewing தேர்தல் குறித்து 23ஆம் திகதி இறுதி முடிவு!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஒரு தீர்மானத்தை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து செல்வதில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உத்தியோகபூர்வ அதிருப்தி வெளியிட ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டு உள்ளூமன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்களுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் ஆணைக்குழு வியாழக்கிழமை 10 மணியளவில் கூடியது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி. திவாரத்ன,எம்.எம்.மொஹமட் மற்றும் கே.பி.பி.பதிரன ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி நெருக்கடி காரணமாக வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும்,அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி வழங்குமாறு நிதியமைச்சருக்கு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கப் பெறாமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு காண அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்களுடன் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்தை எடுக்க ஆணைக்குழு தீர்மானித்தது.

இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை அரசியல் கட்சி செயலாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து உத்தியோகப்பூர்வமான தீர்மானத்தை அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான தபால் மூல வாக்கெடுப்பை கடந்த பெப்ரவரி மாதம் 22,23,24 மற்றும் 28 ஆகிய திகதிகளிலும் பொது வாக்கெடுப்பை மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தவும் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

நிதி நெருக்கடி காரணமாக வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்ட காரணத்தினால் தபால்மூல வாக்கெடுப்பு பிற்போடப்பட்டதை தொடர்ந்து மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பும் பிற்போடப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை விடுவிடுப்பதை தடுக்கும் வகையிலான திறைசேரியின் செயற்பாட்டுக்கு உயர்நீதிமன்றம் கடந்த 03 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 07 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அரச அச்சகத் திணைக்களத் தலைவருடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28,29,30 மற்றும் 31 ஆம் திகதிகளிலும்,பொது வாக்கெடுப்பை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 8ஆம் திகதி திறைசேரியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்தது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி விடுவிப்பு விவகாரத்தில் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் அனுமதி அத்தியாவசியமானது என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை விரைவாக வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பி வைத்தார்.

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு கடந்த இருவாரங்களில் மாத்திரம் இரு தடவைகள் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாககும்,அதற்கு சாதகமான பதில் கிடைக்காததால் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கவில்லை,ஆகவே தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments