தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் !

You are currently viewing தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் !

இந்து ஆலயங்களில் தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்கு கையெழுத்து வேட்டை வாகரை கதிரவெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றிய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து வேட்டையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மகஜரில் கையெழுத்திட்டுள்ளனர். 

இந்நிலையில், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

”கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் தேவாரப்பாடல் பெற்ற தலமும் இராவணனால் வழிபடப்பட்ட தலமும் இலங்கையில் விஜயனின் வருகைக்கு முற்பட்ட தலமுமான திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தற்போது தொல்பொருள் திணைக்களத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாலய அபிவிருத்திகள் இவர்களால் தடுக்கப்படுகின்றது. இதேவேளை பதினெட்டு ஏக்கர் பரப்பளவு உடைய இவ் ஆலய எல்லையில் தொல்பொருள் திணைக்களம் பெரும்பான்மை இனத்தின் வியாபார நிலையங்களுக்கு அனுமதி வழங்கி ஆலய பரிபாலன சபையினருக்கு பிரச்சினையை தோற்றுவிக்கின்றனர்.

எனவே இன மத பேதமற்று செயற்படும் தாங்கள் இவ் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதுடன் ஆலய பரிபாலன சபை சுயமாக தமது வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவும், அத்துமீறி ஆலய காணியில் அமைக்கப்பட்டிருக்கும் வியாபார நிலையங்களை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு கிழக்கு மாகண இந்துக்களாகிய நாங்கள் தங்களை பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் சங்கமக்கண்டி மலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை, இசானமலை, வேல் ஓடு மலை மைல்தங்கிய மலை, குடும்பி மலை உட்பட திருகோணமலை மாவட்டத்தில் கல்லடி நீலியம்மன் மலை, குஞ்சிதபாத மலை (இலங்கைத்துறை முகத்துவாரம்), கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம், திரியாய் மலை உட்பட கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்து ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகளையும் இந்துக்களின் பூர்வீக இடங்களையும், வடக்கே குருந்தூர் மலை உட்பட்ட இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களையும் இந்துக்களின் பூர்வீக இடங்களையும் தொல்பொருள் என்ற வகையில் கடந்த கால இனதுவேச அரசாங்கங்கள் சுவீகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி இவற்றை தொல்பொருள் திணைக்கள செயற்பாட்டில் இருந்து விடுவித்து இந்துக்களின் புனித நடவடிக்கைகளுக்கு உதவி நல்குவதுடன் இந் நாட்டு பூர்வீக குடிகளும் இந்நாட்டு தேசிய இனமுமான நாங்கள் இன மத முரண்பாடு அற்று அனைத்து மக்களையும் இந்நாட்டு மக்களாக கருதும் மனம்படைத்த தங்களிடம் அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

அனைத்து கிழக்கு மாகாண இந்துக்கள் சார்பாக, கிழக்கு இந்து ஒன்றியமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் வெருகல் மண்டூர் யாத்திரை அடியார்களும் இவ்விடயங்களை தங்கள் கவனத்துக்கு தருகின்றோம் என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments